திருமண ஆசை காட்டி 35 இளைஞர்களை ஏமாற்றிய டெல்லி பெண்

திருமண ஆசை காட்டி 35 இளைஞர்களை ஏமாற்றிய டெல்லி பெண்

டெல்லியை சேர்ந்த அனிதா எனும் பெண் ஹரியானாவை சேர்ந்த 35 இளைஞர்களிடம் திருமணம் செய்துவைப்பதாக கூறி பண மோசடி செய்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களிடம் அனிதா, கடந்த மாதம் 27-ம் தேதி குறிப்பிட்ட இடம் ஒன்றில் பல ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினம் அந்த இளைஞர்களுக்கும் திருமணம் செய்து வைப்பதாகவும், மணப்பெண் என கூறி சில பெண்களின் புகைப்படத்தையும் அவர்களிடம் காட்டி உள்ளார். அனிதாவின் பேச்சை நம்பிய இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அவரிடம் அளித்துள்ளனர்.

பணத்தை பெற்றுக் கொண்ட அவர் 27-ம் தேதி கர்கோடா எனும் பகுதிக்கு வரும் படியும், அங்கிருந்து பேருந்து ஒன்று அவர்களை திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்லும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறாக சுமார் 35 இளைஞர்களிடம் அவர் பணம் பெற்றுள்ளார். அனிதா சொன்னபடியே குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட இடத்திற்கு இளைஞர்கள் வந்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் தங்களை அழைத்து செல்ல யாரும் வராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை இளைஞர்கள் உணர்ந்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட 35 இளைஞர்களும் அனிதா மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். போலீஸ் தன்னை தேடுவதை அறிந்த அனிதா நேற்று சோனாபட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் இருந்து 30 லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அனிதாவிற்கு உதவி செய்ததாக இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்