திருக்கோயில் பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் முண்டியடிப்பு.

அம்பாறை மாவட்ட திருக்கோயில் பிரதேசத்துக்குட்பட்ட,திருக்கோயில் பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், நிறைவான ஆளணியின்மையினால்  வாகன சாரதிகளும் பொதுமக்களும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,அக்கரைப்பற்று பொத்துவில் வரையான 47Km க்கு உட்பட்ட பிராந்தியத்தில் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் எரிபொருள்  நிரப்பு நிலையம் மாத்திரமே இருப்பதாகவும் அவ் இடைவெளிகளுக்கு வேறெந்த எரிபொருள் நிரப்பு நிலையமும் இல்லையெனவும் இதன்போது தெரிவிக்கின்றனர்.

அவ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒருவர் மாத்திரமே காலை முதல் மாலை வரை கடமையில் இருப்பதனால் நாளாந்தம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு,யாழ்ப்பாணம் போன்ற தூர இடங்களிலிருந்து வருகை தரும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் முண்டியடிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கூட்டுறவுச்சங்க எரிபொருள்  நிரப்பு நிலையத்தில் பெற்றோல்,டீசல்,மண்ணெண்ணை ஆகிய சகல எரிபொருள்களை
ஒரு ஊழியர் மாத்திரமே விநியோகிப்பதனாலேயே,இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஆளணித் தேவையினை பூர்த்தி செய்து தருவதுடன் தூர இடங்களிலிருந்து வருகை தரும் வாகனங்களை கருத்திற்கொண்டு இரவு 12மணி வரையும் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு,திருக்கோவில் தேவசேனாதிபதி அமைப்பும் பொதுமக்களும் வாகன சாரதிகளும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்