மோசடியாளர்களைத் தண்டிக்க புதிய சட்டம் உருவாக வேண்டும்! – ஜனாதிபதியிடம் பல கட்சிகள் வலியுறுத்து 

பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவால் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்குத் தற்போது காணப்படும் சட்டத்தின் பிரகாரம் தண்டனை வழங்கக்  குறைந்தது 10 வருடங்களாகும் என்பதால் புதிய சட்டத்தை உருவாக்கி குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதிக்குப் பல கட்சிகள்  அழுத்தம் கொடுத்து வருகின்றன என்று அரசதரப்பு செய்திகள் தெரவிக்கின்றன.
அத்துடன், பிணைமுறி மோசடியால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தை மறுசீரமைக்குமாறும் குறித்த கட்சிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளன.
சாதாரண சட்டத்தின் பிரகாரம் மாவட்ட நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என்ற அடிப்படையில்தான் வழக்கின் தீர்ப்பு இறுதியாகும் சந்தர்ப்பம் காணப்படுகிறது. அவ்வாறு இந்த விடயம் சென்றால், தீர்ப்பொன்று வழங்கப்படுவதற்குக்  குறைந்தது10 வருடங்களாவது செல்லும். ஆகவே, நல்லாட்சியை நிலைநாட்டவும், மக்களுக்குக்  கொடுத்த வாக்குறுதிகளின் பிரகாரமும் ஜனாதிபதி விசேட சட்டங்களை உருவாக்கி மோசடியாளர்களுக்கு தண்டனையை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி பிணைமுறி மோசடி விசாரணைக்குழு அறிக்கை குறித்து ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பேர்ப்பசுவல் ட்ரசரிஸ் நிறுவனத் தலைவர் அர்ஜுன அலோஸியஸ் உட்பட மேலும் பலர் இந்த மோசடியில் குற்றவாளிகளை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி கூறியிருந்தார்.
தற்போது குறித்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கையளித்துள்ளதுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்