அடுத்தவரின் மானம்…..

கண்டபடி தூற்றுகிறார்
கள்ளனென்றும் சொல்லுகிறார்.
பண்டு போன பழையதெல்லாம்
கொண்டு வந்து காட்டுகிறார்.
தண்ட கட்சி ஆளென்றால்
தலையில் வைத்துப் போற்றுகிறார்.
சண்டையும் பிடிக்கின்றார்
துண்டு நில ஆட்சிக்காய்.

அடுத்தவனின் மானம்
அடிப்படையில் ஹறாம் என்றும்
இடித்துக் காபாவை
அழித்தலுக்குச் சமன் என்றும்
எடுத்துச் சொன்னாலும்
ஏற்கத் தயாரில்லை.
நடத்திய அராஜகத்தை
நவில்கிறோம் என்கிறார்.

பொதுச் சொத்தை எடுத்திருந்தால்
போதுமான சான்றிருந்தால்
அதைக் கொண்டு வந்து
கதைப்பதில் தவறில்லை.
இதனை விட்டு விட்டு
ஏதோ ஒரு கட்டத்தில்
பொதுவாக மனிதர்கள்
புரிகின்ற தவறுகளை
குதறுகிறார் பகிரங்கமாய்
இதுதானா இஸ்லாமிய வழி.

நூறு ரூபா டேட்டாவில்
நாறிப் போகும் கெளரவங்கள்
பாரதூரம் தெரியாது
பகிரப்படும் விடயங்கள்
பேரெடுக்க லைக் வாங்க
பெரிதாகத் தோற்கடிக்க
மாறி மாறி கிழிக்கப்படும்
மனிதர்கள் மானங்கள்
யாரும் உதவா மறுமை நாளில்
வேரோடு சாய்த்து விடும்.

உனக்குத் தெரிந்த குறையெல்லாம்
ஊருக்குச் சொன்னாயா
என இறைவன் கேட்பான் என்று
எங்காவது இருக்கிறதா?
மன, இந்த அரசியலுக்காய்
மானத்தைக் கிழிக்காதீர்
பிண இறைச்சி தின்பதுவாம்
பிறர் புறம் பேசுவது.

பொதுவாக எழுதலாம்
எது தவறெனப் பேசலாம்.
இதோ இந்த ஆசாமி
இப்படியொரு தவறிழைத்தான்,
அது இதென்று பழி கூறி
ஆளை குத்திப் பேசுவது
விதி முறைக்குள் உள்ளதா
நபி நாதர் வழிமுறையா?

யாரையும் காப்பாற்ற
யாருக்கும் கொடி பிடிக்க
பேரெடுக்க எழுதவில்லை
பேச்சுக்களை எழுத்துகளை
கூர்ந்து நோக்கியதில்
கூடி வந்த கவலை
தீர்ந்து போக எழுதினேன்
திருத்துகிறேன் தவறென்றால்.

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்