அம்பாறை – முகத்துவாரத்தில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் இச்சடலம் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக அப்பிரதேச மீனவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர். பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணை செய்தபோது, மரணமடைந்தவர் வில்லியம் வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தரான வைரமுத்து கருணாநிதி (வயது 49) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேசன் தொழிலை மேற்கொண்டுவந்த இவர் நேற்றுக்காலை தொழிலுக்காகச் சென்றவர் வீடு திரும்பி வரவில்லை எனவும் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட சடலத்தை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர் போல் பார்வையிட்டதன் பின்னர் சடலத்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணிப்புரை வழங்கினார்.

இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்