முன்னாள் மன்னனும், சர்ச்சை மன்னனும்! – அரசியல் தகிடுதத்தங்கள் அம்பலம்

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக வர்ணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் அரசியல் தகிடுதத்தங்களை ஆட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகங்களை தாக்கியமை, வெள்ளைவான் கடத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளுடன் மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் சர்ச்சை அமைச்சராக வலம் வந்தவரே மேர்வின் சில்வா.

அதன்பின்னர் மஹிந்தவின் ஆட்சி மாற்றமடைந்ததன் பின்னர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு மைத்திரி தரப்பினருக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தார்.

இந்தநிலையில் மேர்வின் சில்வா நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, ராஜபக்சர்கள் திருடர் அல்ல எனவும், தற்போதைய அபிவிருத்தி திட்டங்கள் மஹிந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டது என்ற வகையிலும் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும் இதே மேர்வின் சில்வாவே 2017ஆம் ஆண்டு ஜனவரி காலப்பகுதியில் “லசந்த விக்ரமசிங்க, பாரத லக்ஷமன், ராகம லொகுசிய்யா போன்றவர்களின் கொலைகளுக்கு காரணம் கோட்டாபய எனவும், கடந்தகாலத்தில் மஹிந்த முறையாக ஆட்சி நடத்தவில்லை எனவும், ராஜபக்சர்களின் ஊழல்களின் ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் பல வங்கிக்கொள்ளைகளில் ராஜபக்சர்கள் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்து இந்த விடயம் தொடர்பாக விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளதாகவும், ராஜபக்ஷர்களின் ஊழல் தொடர்பான ஆதாரங்களை விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

அதேபோல, 2017ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் “ராஜபக்சர்களின் இரகசியங்கள் என்னிடம் உள்ள அவற்றினை விரைவில் அம்பலப்படுத்துவேன் எனவும் மேர்வின் சில்வா ஊடகங்களுக்கு பகிரங்கமாக கூறியிருந்தார்.

அதன்பின்னர் தொடர்ந்தும் அமைதியாக இருந்த அவர் தற்போது மீண்டும் ராஜபக்ஷர்கள் ஊழலில் ஈடுபடவில்லை எனவும் கருத்துகளை முன்வைத்துள்ளார்.

இந்த வகையிலான முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகள் அரசியல் இலாபத்திற்காக, சுயநல அரசியலில் மேர்வின் சில்வா ஈடுபட்டுள்ளதைக் காட்டுகின்றது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேசமயம் மஹிந்தவிடம் இருந்து மேர்வின் சில்வா பிரிந்து வந்ததன் பின்னர் இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்ட நிலையில் மீண்டும் இருவரும் இணையப்போகின்றார்கள் எனக் கூறப்படுகின்றது.

குறிப்பாக தற்போது மீண்டும் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள மஹிந்த, கடந்தகாலத்தில் தனக்கு பக்கபலமாக செயற்பட்ட முக்கியமானவர்களை மீண்டும் தன் பக்கம் இணைத்துக் கொள்ளப்போகின்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும் முன்னாள் மன்னனுடன், சர்ச்சை மன்னனாக வர்ணிக்கப்படும் மேர்வின் சில்வா இணைந்துகொள்வது மீண்டும் கடந்தகால அடக்குமுறை அரசியலுக்கு வழிகோளும் செயற்பாடு என தென்னிலங்கை அரசியல் புத்திஜுவஜிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் மஹிந்த மீண்டும் மேர்வின் சில்வாவை தன்பக்கம் சேர்த்துக்கொள்வது அவருக்கு தற்போது கிடைத்துவரும் அரசியல் ஆதரவிற்கும் சிக்கலாக அமையும் என்பதே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கும் கருத்து.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்