ஊக்கமருந்து சர்ச்சையில் இந்திய வீரருக்கு போட்டித்தடை

ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ள இந்திய முன்னாள் சகலதுறை ஆட்டவீரர் யூசுப் பதானுக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை ஐந்து மாதங்கள் போட்டித் தடை விதித்துள்ளது.

இதனையடுத்து ராஞ்சி கிண்ண தொடரில் பரோடா அணியிலிருந்து யூசுப் பதான் நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் விதிமீறல் என்பதை யூசுப் பதான் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் போட்டித் தடை தொடர்பான அறிவிப்பை இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் டெர்பியூட்டலின் என்னும் தடைசெய்யப்பட்ட மருந்தை யூசுப் பதான் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் மீது இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

டெர்பியூலின் இருமலுக்காக பயன்படுத்தப்படும் மருந்திலுள்ள வேதிப் பொருள் என்று கூறப்படுகின்றது. இதனை பயன்படுத்த வேண்டுமாயின் வீரர்கள் அனுமதி பெறவேண்டும். இவ்வாறு அனுமதி பெறாத காரணத்தினால் யூசுப் பதான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பதான் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக விளக்கமளித்த பதான் பரிந்துரைக்கப்பட்ட மருந்துக்கு பதிலாக தவறான இருமல் மருந்து தனக்கு செலுத்தப்பட்டதாக விளக்கமளித்திருந்தார். அவருடைய விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. உடல்நலக்குறைவு காரணமாகவே அவர் மருந்தை பயன்படுத்தினார் என்பதும் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்காக அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் அவருடைய போட்டித்தடை கணிக்கப்படுவதாகவும் ஜனவரி 15 ஆம் திகதியுடன் தடைக்காலம் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்