பிணைமுறி மோசடி விவகாரத்தால் தேசிய அரசுக்குள்  கடும் சொற்போர்!

பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும்போது கூட்டு அரசிலுள்ள இரு பிரதான கட்சிகளிடையே கடும் சொற்போர் மூளும் அபாயமேற்பட்டுள்ளது.
பிணைமுறி விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே பிரதான சூத்திரதாரியென்று ஒருபுறத்தில் விமர்சனமும், திருடர்களைப் பிடித்த பொலிஸாக சுதந்திரக் கட்சியே திகழ்கின்றது என மறுபுறத்தில் புகழ்ந்தும் பேசப்படுவதாலுமே இருதரப்பு மோதல் உக்கிர கட்டத்தை எட்டும்நிலை உருவாகியுள்ளது.
பிணைமுறி மோசடி தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் டிசம்பர் 30ஆம் திகதி கையளிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த அறிக்கை தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சிகள் கூட்டாக சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றுமுன்தினம் இதே கோரிக்கையை விடுத்திருந்தார்.
இதன்பிரகாரம் நாளை 10ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற்கட்டளையின் 14ஆவது ஷரத்தின்பிரகாரமே மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய  தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் கூட்டாட்சி அமைத்த பின்னர் இரு கட்சிகளுக்குமிடையே சிறிய அளவில் முரண்பாடு இருந்துவந்தது. 19 ஆவது திருத்தச்சட்டம், புதிய தேர்தல் முறைமை உள்ளிட்ட விவகாரங்களால் அந்த மோதல் சற்று உக்கிரமடைந்தது. அதன்பின்னர் பிணைமுறி விவகாரமே இருதரப்பும் முட்டிக்கொள்ளும் நிலைமையை உருவாக்கியது.
இந்த மோசடியை சுட்டிக்காட்டியே சுதந்திரக் கட்சி அரசிலிருந்து வெளியேறவேண்டும் என்றும் ஜனாதிபதிக்கு கட்சிக்குள் இருந்தும், வெளியே இருந்தும் அழுத்தங்கள் விடுக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இந்த விவகாரமே பெரும் தலையிடியாக இருந்துவருகின்றது.
அறிக்கை வெளியான பின்பு ஐக்கிய தேசியக் கட்சிமீது சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விமர்சனக்கணைகளைத் தொடுத்துவருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும்வேளை ஐக்கிய தேசியக் கட்சிமீது சு.க. குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் பட்சத்தில், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பதிலடி கொடுத்தால் கடும் நெருக்கடி நிலை ஏற்படும். சிலவேளை, கூட்டரசின் ஆயுளில்கூட இது தாக்கத்தை செலுத்தக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்