வாள்வீச்சுப் பயணத்தால் ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்!

“கடுமையான தீர்மானங்களை எடுப்பதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது”  என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பிணைமுறி விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது அது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் கோருவதற்காக நான்தான் இலஞ்ச, ஊழல் விசாரணைக்குழுவுக்குச் சென்றேன். இன்று அல்ல 2008ஆம் ஆண்டுமுதலே இத்தகைய மோசடி இடம்பெற்றுள்ளது என ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கும்போது, எல்லா மோசடிகளும் மூடிமறைக்கப்படும் என்றே சிலர் குற்றஞ்சாட்டினார். ஆனால், இன்று ஊழல்வாதிகளின் முகத்திரை கிழிந்துள்ளது. மக்கள் நீதிமன்றில் தண்டனையை எதிர்கொள்ளவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இழக்கப்பட்ட தொகையை சட்டம் இயற்றியாவது மீள மீட்டெடுப்போம். ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா விமானசேவைகள் தொடர்பான விசாரணை அறிக்கையும் வெளிவரவுள்ளது. இதன்போதும் முக்கிய தகவல்கள் அம்பலமாகும்.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அச்சமின்றி தீர்மானங்களை எடுத்து வருகிறார். ஊழல்வாதிகளுக்கு எதிராக பாரதூரமான முடிவுகளை எடுப்பதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவரால் எடுக்கப்படுகின்ற தீர்மானம் விளையாட்டுத் தீர்மானம் அல்ல. எனவே, அவரைப் பாதுகாக்கவேண்டும்.
ஊழல் மோசடியாளர்கள், பாதாளக்குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்போது இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படும். சில தலைவர்கள் உயிரையும் இழக்க நேரிட்டுள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்