மாற்றம் வருமா… அடுத்த போட்டியில்…

‘‘தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது,’’ என, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி, 72 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது டெஸ்ட் வரும் 13ல் செஞ்சுரியனில் துவங்குகிறது. முதல் டெஸ்டில் ‘மிடில்–ஆர்டர்’ பேட்ஸ்மேன் ரகானே சேர்க்கப்படாதது குறித்து விமர்சனம் எழுந்தது. இதனால் 2வது டெஸ்டில் ரகானேவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியது: துவக்க வீரர் ஷிகர் தவான், ரோகித் சர்மாவின் டெஸ்ட் போட்டி செயல்பாடுகளை எடுத்துப் பார்த்தால், அன்னிய மண்ணில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இவர்கள், இந்திய மண்ணில் விளையாடிய டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டனர். இதேபோல புஜாரா பதிவு செய்த 14 சதத்தில், 13 இந்தியா (10 சதம்) மற்றும் இலங்கை (3) மண்ணில் அடிக்கப்பட்டவை.

அதேநேரத்தில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மண்ணில் ரன் மழை பொழிந்த துவக்க வீரர் லோகேஷ் ராகுல், சேர்க்கப்படாதது வியப்பாக இருந்தது. இதைப்போல, அன்னிய மண்ணில் ரன் வேட்டை நடத்திய ‘மிடில்–ஆர்டர்’ பேட்ஸ்மேன் அஜின்கியா ரகானேவுக்கு இடம் கிடைக்காதது ஏன் எனத் தெரியவில்லை. கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் முடிவு, ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஆனால், அன்னிய மண்ணில் விளையாடக் கூடிய வீரர்களுக்கு இடம் கிடைக்காதது அதிர்ச்சி அளித்தது.

செஞ்சுரியன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கப் போவதில்லை. ரகானே அல்லது ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். துவக்க வீரராக தவான் நீக்கப்பட்டு ராகுல் சேர்க்கப்படலாம் அல்லது ‘மிடில் ஆர்டரில்’ ரோகித் சர்மாவுக்கு பதிலாக ரகானேவுக்கு இடம் கிடைக்கலாம். செஞ்சுரியன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இங்கு, கேப்டவுன் ஆடுகளத்தைவிட பந்து அதிகமாக ‘பவுன்சர்’ ஆகும். இதனை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக் கொண்டால் நல்லது. இப்போட்டிக்கு முன், இந்திய வீரர்கள் தங்களை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது அவசியம். இவ்வாறு கங்குலி கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்