ரம்யா கிருஷ்ணனின் அடுத்த அதிரடி

ஒரு படத்தில் ஒரு நாயகன் பெயர் வாங்க வேண்டும் என்றால் அவருக்கு எதிராக பலமான வில்லன் கதாபாத்திரம் இருக்க வேண்டும். அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களும் வலிமையானவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாயகன் எளிதில் பெயர் வாங்க முடியும்.

‘படையப்பா’ படத்தில் ரஜினிகாந்திற்கும், ‘பஞ்ச தந்திரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கும் பெயர் கிடைக்கக் காரணமாக இருந்தவர் அவர்களை எதிர்த்த வில்லன்கள் கதாபாத்திரம் அல்ல வில்லி கதாபாத்திரம். இரண்டு படத்திலும் தன்னுடைய அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி ஆகவும், ‘பஞ்ச தந்திரம்’ படத்தில் மரகதவல்லி என்கிற மேகி ஆகவும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் கலங்கடித்தவர் ரம்யா கிருஷ்ணன்.

‘பாகுபலி 2’ படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஆகியோரது கதாபாத்திரங்களுக்கு இணையாக ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘ராஜமாதா’ கதாபாத்திரமும் பேசப்பட்டது. ‘மகேந்திர பாகுபலி’ என உச்சஸ்தாயியில் அவர் குரல் கொடுத்தது பலரையும் புல்லரிக்க வைத்தது.

அப்படி ஒரு பெயரை மீண்டும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் வாங்குவார் என்கிறது படக்குழு. ஹிந்தியில் அனுபம் கேர் நடித்த கதாபாத்திரம் தமிழில் பெண் கதாபாத்திரமாக மாற்றப்பட்டு, அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். ‘படையப்பா, பஞ்ச தந்திரம்’ படக் கதாபாத்திரங்களின் வரிசையில் ரம்யாவுக்கு இந்தப் படமும் மறக்க முடியாத ஒரு படமாக இருக்குமாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்