வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் வளாகத்தில் வேட்பாளர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொலிசார்.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் வளாகத்தில் வேட்பாளர்கள் சிலருடன் இணைந்து நேற்று மாலை பொலிசார் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதில் சிவல் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் வவுனியா நகரசபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவரும் கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வில் ஈடுபட்டமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பண்டாரிக்குளம் பகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், வவுனியா நகரில் போட்டியிடும் வேட்பாளரும், தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பில் பண்டாரிக்குளத்தில் போட்டியிடும் வேட்பாளரும் இதில் கலந்து கொண்டு பொங்கல் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி பொலிசார் குறிப்பிட்ட சில வேட்பாளருக்கு ஆதரவாக நடக்கின்றார்களா என ஏனைய வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்