மலேசியாவில் சிக்கிய வங்கதேச ஆட்கடத்தல் கும்பல் தேடுதல் வேட்டையில் சிக்கிய இந்தியர்கள்

மலேசியாவில் சிக்கிய வங்கதேச ஆட்கடத்தல் கும்பல் தேடுதல் வேட்டையில் சிக்கிய இந்தியர்கள்

மலேசியாவிற்குச் சட்டவிரோதமாக வங்கதேசத்தவர்களை கடத்தி வந்த ஆட்கடத்தல் கும்பல் ஒன்று மலேசிய குடிவரவுத்துறையின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது. 

வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரவூப் என்றவரின் தலைமையில் இக்கடத்தல் கும்பல் செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது. ‘அபாங் பங்களா’ என்ற பெயருடன் அழைக்கப்படும் அப்துல் ரவூப், நூற்றுக்கணக்கான வங்கதேசத்தவர்களை சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் கடத்தி  வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

50 பேர் கைது

“ ‘அபாங் பங்களா’ உதவியாளர் என நம்பப்படும் மலேசிய நபர் ஒருவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த 50 பேரும் நள்ளிரவு 2 மணிக்கு நடந்த தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 48 வங்கதேச பாஸ்போர்ட்கள், 13000 மலேசிய ரிங்கட் (சுமார் 2 லட்சம் இந்திய ரூபாய்) பணம் கைபற்றப்பட்டுள்ளது” என நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குநர் ஜெனரல் முஸ்தபர் அலி தெரிவித்துள்ளார். 

சட்டவிரோதமாக மலேசியாவில் நுழைய முயன்று வெளியேற்றப்பட்ட வங்கதேசத்தவர்களை மீண்டும் மலேசியாவிற்குள் கடத்தும் வேலையிலும் இக்கும்பல் ஈடுபட்டுள்ளது. இக்கும்பல் எட்டு மாதங்கள் செயல்பட்டு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

எவ்வாறு கடத்துகின்றனர்?

முதலில், வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு விமான டிக்கெட்கள் ஏற்பாடு செய்து அழைத்து வருகின்றனர். பின், ஜகார்த்தாவிலிருந்து ‘மலாக்கா நீர்ச்சந்தி’ வழியாக மலேசிய பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த நீர்ச்சந்தி மலேசியா மற்றும் இந்தோனேசியா இரு நாடுகளை இணைக்கக்கூடியது.

அழைத்துவரப்பட்ட நபர்களை ஆட்கடத்தல்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். இப்படி சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்ட ஒவ்வொரு நபரும் ஆட்கடத்தல் கும்பலுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய்(15000 முதல் 20000 மலேசிய ரிங்கட்) வரை கொடுக்க வேண்டும். அதன் பிறகே வேலை வாங்கிக் கொடுக்கும் ஏஜெண்ட்டிடமோ அல்லது வேலைக் கொடுப்பவரிடமோ அந்த நபர் ஒப்படைக்கப்படுவார். பணம் கொடுக்கும் வரை அந்த நபர்களை அக்குமபல் வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கும்.

இப்படி வருபவர்களை குறைந்த சம்பளத்திற்கு ஏஜெண்டுகள் வழியாகவோ நேரடியாகவோ பல கட்டுமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், தொழில் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகின்றன. பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள வங்கதேசத்தவர்கள் இப்படி மலேசியாவிற்குள் வரும் முயற்சியில் ஈடுபடுவது, ஆட்கடத்தல்காரர்களுக்கு சாதமாக உள்ளது. 

இதேப் போன்று, கோலாலம்பூர் அருகே நடத்தப்பட்ட மற்றொரு தேடுதல் வேட்டையில் 121 வங்கதேசத்தவர்கள், 60 இந்தியர்கள், 2 பாகிஸ்தானியர்கள் முறையான ஆவணங்களின்றி கைது செய்யப்பட்டுள்ளனர். 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்