வாழைச்சேனை செம்மண்ணோடையில் மரத்துக்கும் யானைக்குமிடையில் மோதல்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் உட்பட மூவர் தாக்குதலுக்குள்ளாகி செவ்வாய்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை செம்மண்ணோடை கிராமத்தின் போக்கடி வீதியின் வடிகாண்களை வாழைச்சேனை பிரதேச சபை வாகனத்தை கொண்டு சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐக்கிய தேசிய முன்னியில் போட்டியிடும் வேட்பாளர் முகம்மது ஹனிபா ஹக்கீம் அவரோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செம்மண்ணோடை வட்டார தலைவர் இஸ்மாலெப்பை சம்மூன் இருவரும் சென்றனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூலம் பிரதேச சபையில் இருந்து வாகனத்தை கொண்டு வந்து நாட்கள் சுத்தரிப்பு வேலை செய்கின்றோம் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று அவ்விடத்திற்கு வந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செம்மண்ணோடை வட்டார வேட்பாளரின் ஆதரவாளர்கள் கேட்டதில் இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் இஸ்மாலெப்பை சம்மூன் சீமெந்து கல்லால் தலையில் தாக்கப்பட்டதுடன், தடுக்க முற்பட்ட வேட்பாளர் ஹக்கீமும் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களான முகம்மது ஹனிபா அஹமட் மற்றும் முஸ்தபாலெப்பை முஹம்மட் றிகாஸ் ஆகியோரும் சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளுராட்சி தேர்தல் நடைபெறும் போது வேட்பாளர் ஒருவரின் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதற்கு வாழைச்சேனை பிரதேச சபை வாகன உதவியை வழங்கி இருப்பது சட்டத்திற்கு முரணான விடயம் என தாக்குதலுக்குள்ளான வேட்பாளர் முகம்மது ஹனிபா ஹக்கீம் தெரிவித்தார்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றதென பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது. அத்தோடு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் வன்முறையாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்