ஆட்சி மாற்றத்தினூடாக தென்பகுதியடன் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது! சிவசக்தி ஆனந்தன்

ஆட்சி மாற்றத்தினூடாக தென்பகுதியடன் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபை வேட்பாளர் விஜயதாசன் (உதயன்) அவர்களது அலுவலகத்தைத் திறந்துவைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களில் எமது மக்கள் நிலையான அபிவிருத்தியை நோக்கியும் நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வற்கும்

வாக்களிக்க வேண்டும். இந்தத் தேர்தலை நாம் முதலில் பிரதேச அபிவிருத்தியை மையப்படுத்தியதாகவே எண்ணியிருந்தோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. சம்பந்தன் அவர்கள் எத்தகைய அரசியல் தீர்வும் நாட்டு மக்கள்

அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அது அங்கீகரிக்கப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே புதிய அரசியல் யாப்பிற்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டு அதற்கான மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்காகவே தற்போது உள்ளூராட்சி தேர்தல் என்ற போர்வையில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைகளின் அதிகார எல்லைக்குட்பட்டு அதற்கென குறித்தொதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான தேர்தலானது நாடு

முழுவதிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றது. இத்தேர்தலின் முக்கியத்துவத்தை மறைப்பதற்காக தென்பகுதி அரசியல் தலைமைகள் தங்களுக்குள்

முரண்பாடு இருப்பதாக நடிக்கின்றன. இங்கு எமது மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தங்களுக்குள் கருத்தியல்ரீதியாக மோதிக்கொண்டாலும் எமக்கான தீர்வைப்பொறுத்தவரை அனைவரும் ஒரே சிந்தனையுடனும் முடிவுடனும்தான் இருக்கின்றனர்.

ஆட்சி மாற்றத்தினூடாக இவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் தமிழரசுக் கட்சியும் அவர்களுடன் ஒத்திசைந்தே செயற்படுகின்றது. இந்த ஒத்திசைவானது தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கு சாதகமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக இருந்தாலும் நாம் வரவேற்கலாம். ஆனால் எமது கைகளைக் கொண்டே எமது கண்களைக் குத்தும் நடவடிக்கைகளுக்கு நாம் எப்படி துணைபோகமுடியும்?

தேர்தல் வாக்குறுதியாக இப்பொழுது உள்ளக சுயநிர்ணயம் சமஸ்டி என்று எதிர்க்கட்சித் தலைவர் திருவாய் மலர்கிறார். ஆனால் ஒருங்கிணைப்புக்

குழுவில் நாம் கேள்வி எழுப்புகையில் மழுப்பலான பதில்களையே அவரால் தரமுடிந்தது. வடக்கு-கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை, பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதை நாம் எதிர்க்கவில்லை, சமஸடி என்ற பெயரில் அதிகாரம் பகிரப்படும் சாத்தியமில்லை என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இப்பொழுது உள்ளக சுயநிர்ணயம் குறித்தும் சமஸ்டி குறித்தும் பேசிவருகிறார்.

அங்கத்துவக் கட்சிகளுக்குக்கூட தெரிவிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தாமே முடிவுகளை எடுத்து தென்னிலங்கை அரசியல் சக்திகளைத்

திருப்திப்படுத்திவிட்டு இப்பொழுது உள்ளக சுயநிர்ணயம் குறித்துப் பேசுவதால் என்ன பயன்? அப்படி என்றால் அந்த இடைக்கால அறிக்கையைத் தூக்கி

வீசிவிட்டோம் என்று பகிரங்கமாக சொல்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் தயாரா? இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 2017ஆம் ஆண்டு மேலும் இரண்டாண்டுகள் கால அவகாசம் வழங்கியபோது இன்னும் இரண்டு மாதங்களில் இடைக்கால அறிக்கை வரப்போகிறது. இவ்வளவு காலம் பொறுமையாக இருந்தீர்கள். இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்திருங்கள். அந்த இடைக்கால அறிக்கையில் தமிழ் ஈழம் என்ற சொல்லைத் தவிர அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

அதனால் எம்முடைய செயற்பாடுகள் அந்த நோக்கத்தை சிதைத்துவிடக்கூடாது என்று கூறியே கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்று கால அவகாசமும் வழங்கியிருந்தார். இதற்கு நாம் உடன்படவில்லை.

கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இடைக்கால அறிக்கையும் வெளிவந்தது. அது பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்பொழுது வந்திருப்பது இடைக்கால அறிக்கைதான் என்றும் இதைப் பற்றிப் பிடித்து மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றார். அரசியலில் உச்சபட்ச கோரிக்கைகளை முன்வைத்து பேரத்தின்போது சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து யாருக்கும் வெற்றியுமில்லை.

தோல்வியுமில்லை என்ற ரீதியில் வெற்றி மக்களுக்கானது என்ற அடிப்படையில் தீர்வு காண்பதே சரியான அணுகுமுறையாகும். பாதிக்கப்பட்ட

தரப்பினரான தமிழ் தேசிய இனம் இனி வருங்காலத்தில் எத்தகைய துன்புறுத்தலுக்கும் ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்யக்கூடிய வகையில்

கோரிக்கைகளை முன்வைக்காதது மட்டுமன்றி பெரும்பான்மைவாதிகளைத் திருப்தி செய்யக்கூடிய விடயங்களுக்கு இணங்கி அதன் அடிப்படையில் வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கையை மேலும் முன்னேற்றப் போகிறோம் என்றால் அது எப்படி சாத்தியம் என்ற கேள்வியை எமது மக்கள் உங்களிடம் வாக்குக் கேட்டு வருகின்ற தமிழரசுக் கட்சியினரைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

நாளாந்தம் நாம் சந்தைக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது கடைக்காரரிடம் பேரம்பேசி அவர் சொல்கின்ற விலையை விடக் குறைந்த விலையில் கெள்வனவு செய்கிறோமா அல்லது அவர் சொல்லும் தொகையைவிட அதிகமாகக் கொடுத்து கொள்வனவு செய்கின்றோமா? இதைப் புரிந்துகொண்டால் இடைக்கால அறிக்கையைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது. அபிவிருத்தி பற்றி பேசுகின்றனர். கடந்தமுறை நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியே பெரும்பான்மையான ஆசனங்களை

ஒதுக்கிக்கொண்டு அங்கத்துவக் கட்சிகளுக்குக் கிள்ளித் தெளித்தது.

மேலும், அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களே தவிசாளராக நியமிக்கப்படுவர் என்றும் தெரிவித்திருந்தது. தமது கட்சியினரைத் தவிர ஏனைய அங்கத்துவக் கட்சிகளின் தவிசாளர்களை தென்னிலங்கை ஆளும் கட்சி மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட கட்சிகளின் துணையுடன் பதவியிலிருந்து இறக்கி அவைகளையும் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. தாங்கள் ஆட்சி செய்த சபைகளிலும் நேர்மையான முறையில் அபிவிருத்திப் பணிகள் எதனையும் முன்னெடுக்காததுடன் ஊழலில் ஈடுபட்டிருந்ததும் அனைவருக்கும் தெரியும்.

இதனைத் தொடர்ந்து மாகாணசபையிலும் கூட்டமைப்பின் தத்துவத்திற்கு மாறாக தாம் விரும்பியவர்களை அமைச்சர்களாக நியமித்து அதிலும் தனது

சர்வாதிகாரத்தை நிலைநாட்டியது. அத்தகைய அமைச்சர்களும் ஊழல் மோசடியில் சிக்கி பின்னர் வெளியேறினர். இப்பொழுது அவர்கள் தம்மீதான ஊழல்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இவர்கள்தான் முதலமைச்சர் நியமித்த இரண்டாவது விசாரணை கமிஷனை எதிர்த்ததுடன் முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அவரையே பதவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு திட்டமிட்டு பின்னர் மக்களின் எழுச்சியினால் மூக்குடைபட்டு தமது பதவிகளை வேறுவழியின்றி துறந்தனர்.

ஒட்டுமொத்தத்தில் அரசியல் கொள்கையிலும் நேர்மையின்றி, மக்களின் சேவைகளிலும் தூய்மையின்றி செயற்பட்டவர்களை எமது மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள். இம்முறை எமது மக்கள் ஒரு அரசியல் மாற்றத்திற்காகவும் ஏமாற்றிய தலைமைகள் தமது தவறுகளை

உணர்ந்துகொள்வதற்காகவும் உதயசூரியனுக்கு வாக்களிப்பது உறுதி. தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே எமது வெற்றியும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்