தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சில துரோகிகள் உடைக்க முனைகின்றனர்!!

தமிழர் போராட்டம் வீரத்தால் வீழ்த்தப்பட்டதல்ல. துரோகத்தால் வீழ்த்தப்பட்டது. அதேபோல் இன்று தமிழர்களின் பலமான அடையாளமாக இருக்ககூடிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சில துரோகிகள் உடைக்க முனைகின்றனர். அதுவே அவர்களது தேவையாகவும் இலக்காகவும் இருக்கின்றது என காரைதீவு பிரதேச சபைக்காக போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.

காரைதீவில் நடைபெற்ற காரைதீவு பிரதேச சபை சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் மற்றும் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று துன்ப துயரங்களை அனுபவித்து வந்த மக்களின் வாக்குப்பலத்தால் எதிர்க்கட்சி தலைமைத்துவத்தினை பெற்று தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண போராடி வருகின்றது.

இவ்வாறான நிலையில் ஒரு தனிமனிதனுக்காக நிதி ஒதுக்காமல் சமூகத்திற்கான அபிவிருத்திக்காக ஒதுக்கியதற்காக இன்று சுயேற்சை வடிவிலும் மாற்றுக்கட்சிகள் ஊடாகவும் தேர்தலில் குதித்துள்ளனர். காரைதீவு மக்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன செய்திருக்கின்றது எனவும் அவர்கள் கேட்கின்றனர்.

அப்படியானால் காரைதீவில் இடம்பெற்றுவரும் அபிவிருத்திகள் யாவற்றிக்கும் ஐநாவில் இருந்தா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். அனைத்து அபிவிருத்திகளும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஊடாகவே நடைபெற்றுள்ளது என்பதை அவர்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன் என்றார்.

கடந்த காலத்தில் வீடு கூடாது என்றவர்கள் சைக்கிளில் வந்தனர். பின்னர் சைக்கிள் ஓடவில்லை என கூறி சூரிய ஒளியில் வாழப்போகின்றோம் என்கின்றனர். இவ்வாறு மூன்று வருடத்தில் மூன்று கட்சிகள் தாவியவர்கள் முப்பது வருடத்தில் எத்தனை கட்சி தாவப்போகின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.

தன்னை ஈன்றெடுத்த தாயை தப்பு சொல்வது போல் முப்பது வருடம் வாக்களித்தது போதும், நாங்கள் அபிவிருத்தியின் பின்னால் ஓடுகின்றோம் என்கின்றனர். அப்படியானால் உங்களின் பின்னால் நிற்கின்ற இளைஞர்கள் ஏன் வீதியில் நிற்கின்றனர். தொழில் வாய்ப்பை பெற்று தருவாதாக அவர்களிடம் கூறி ஏழு இலட்சம் வரை பெற்று ஜந்து இலட்சத்தை தொழிலுக்காக கொடுத்து இரண்டு இலட்சத்தை தங்களது பைகளுக்குள் வைத்து விட்டு தொழில் பெற்றுக் கொடுத்துள்ளோம் என மாயப்பூச்சாண்டி காட்டுகின்றீர்கள். நீங்கள் செய்வது சேவை அல்ல வியாபாரம் எனவும் குறிப்பிட்டார்.

ஆகவே காரைதீவு மக்கள் மாற்றுக்கட்சிகளுக்கும் சுயேற்சைக்குழுக்களுக்கும் வீணே வாக்களிக்காமல் தமிழன் ஒருவன் உள்ளவரை மறக்க முடியாத தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்