தமிழ் கலாச்சாரத்தை முதனிலைப் படுத்திய கனடா பிறம்ரன் தமிழ் மூத்தோர் ஒன்றியத்தின் தமிழ் மரபுத் திங்கள்..

பிறம்ரன் தமிழ் மூத்தோர் ஒன்றியத்தினரின் தமிழ் மரபுத் திங்கள் விழா 20-01-2018 கஸ்ரல் புறுக் இரண்டாம்நிலை பாடசாலையில் மாலை 6 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. பிரதம அதிதியாக பிறம்ரன் கிழக்கு பாரளுமன்ற உறுப்பினர் திரு. ராஜ் கிறேவால் கலந்து கொண்டார் அவர்களுடன் பீல் பிராந்திய நகரசபை உறுப்பினர்களும் கலந்து விழாவை சிறப்பித்தனர்.. தவில் நாதஸ்வரம் போன்ற தமிழ் இசைக்கருவிகள் முழங்க பிரதம அதிதி ராஜ் கிறேவால் சங்கத் தலைவர் திரு. டேவிட் ராஜரட்ணம், சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் சகிதம் தமிழ் பண்பாட்டுடன் இசைந்த காவடி ஆட்டத்துடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

தொடர்ந்து கனடிய தேசிய கீதம், தமிழ்த் தாய் வாழ்த்து, பிரம்ரன் மூத்தோர் ஒன்றிய பாடல் பாடப்பட்டு, எம்மை விட்டு பிரிந்தவர்களுக்கான மௌன அஞ்சலி இடம் பெற்றது. தலைவர் தமது உரையை இரு மொழிகளிலும் தமிழ் மொழியின் மகத்துவத்தையும் சிறப்பையும் பற்றி பேசினார். மேலும் உறுப்பினரின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் தமதுரையில் பல தமிழ் சொற்களை ஆங்கில உரையுடன் கலந்து பேசி தானும் எங்களில் ஒருவர் என்பதை உணரும் வகையில் கருத்தகளை வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகளாக பிறம்ரன் தமிழ் மூத்தோர் ஒன்றியதினரால் தயாரித்து வழங்கப்பட்ட காவடி ஆட்டம் நடனங்கள், நாடகம்,மற்றும் சிறுவர்களின் நடனங்கள், பேச்சுக்கள் என்பன இடம் பெற்றன. தொல்காப்பியத்தை அடிப்படையாக கொண்ட தமிழ் மொழியின் இலக்கண விளக்கம் பற்றி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட திரு.சிவபாலு அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

செயலாளர் திருமதி அல்போன்ஸ் அவர்களின் நன்றி உரையுடன் சிற்றுண்டி,பானங்களும், பொங்கலும் வழங்கப்பட்டன. இறுதியான சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்காபறோ முதியோர்களினால் ‘ஜெய வீரசிங்கம்’ என்ற தலைப்பில் தொகுத்து வழங்கப்பட்ட வில்லுப்பாட்டுடன் விழா நிறைவு பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்