இறந்த பிறகும் நகமும் முடியும் வளருமா?

tamilcnn.lk

இறந்தவுடன் இதயம் துடிப்பது நிற்கிறது, இரத்தத்தின் வெப்பநிலை குறைகிறது, கை கால்கள் இறுகிவிடுகின்றன. ஆனால், விரல் நகங்கள் தொடர்ந்து வளர்கின்றன, தலை முடி நீளமாக வளர்கிறது….

இப்படித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பிணங்களை வைத்து பாடம் படிக்கும் மருத்துவ மாணவர்களும் இப்படியே கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இது உண்மையா? இறந்த பிறகும் நகமும் முடியும் வளருமா?

ஒரு மனிதன் இறந்ததும் அவனது உடலில் உள்ள பல்வேறு செல்கள் வெவ்வேறு நேரத்தில் இறக்கின்றன.

இதயம் துடிப்பது நின்றதும் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் சப்ளை துண்டிக்கப்படுகிறது. குளுக்கோஸ் இல்லாததால் மூன்று முதல் ஏழு நிமிடங்களுக்குள் நரம்பு செல்கள் இறந்து விடுகின்றன.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இதயத்தை ஒருவர் உடலிலிருந்து 30 நிமிடங்களுக்குள் அகற்றி ஆறு மணி நேரத்திற்குள் இன்னொருவரின் உடலில் பொருத்திவிட வேண்டும்.

ஆனால் தோல் செல்கள் நீண்ட நேரம் உயிருடன் இருக்கும். இறந்து 12 மணி நேரம் ஆனபிறகு கூட தோலை எடுத்து தோல் மாற்று சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.

நகம் வளரவேண்டுமானால் தோலுக்கடியில் புதிய செல்கள் உருவாக வேண்டும். இதற்கு குளுக்கோஸ் தேவை. ஒரு நாளைக்கு உயிருள்ள ஒரு மனிதனின் நகம் தோராயமாக 0.1 மில்லிமீட்டர் வளர்கிறது, வயதாகும்போது இது குறையலாம். நகம் தொடங்கும் இடத்தில் germinal matrix என்னும் ஒரு அடுக்கு திசுக்கள் உள்ளன. இவைதான் நகம் வளர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளவை.

புதிதாக தோன்றும் செல்கள் பழைய செல்களை முன்னோக்கித் தள்ளுகின்றன. இதனால்தான் நகம் விரல் நுனியிலிருந்து வெளிநோக்கி வளர்கிறது. இறப்பு குளுக்கோஸ் சப்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. எனவே நகம் வளர்வதும் நின்றுவிடுகிறது.

கிட்டத்தட்ட முடி வளர்வதும் இதேபோல்தான். அதற்கும் குளுக்கோஸ் தேவை. இதயம் நின்றதும் இரத்தம் நிற்கிறது, குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுவதற்கு தேவையான ஆக்சிஜன் சப்ளை தடைபடுகிறது, முடி வளர்வதும் நின்றுவிடுகிறது.

ஆனால் இன்னும் இறந்தவர்களுக்கு நகம் வளரும், முடி வளரும் என்று கூறப்படுவது ஏன்?

இத்தகைய தகவல்கள் தவறானவை என்றபோதிலும், இவற்றிற்குப் பின்னால் ஒரு உயிரியல் உண்மை உள்ளது. உண்மையில் நகம் வளர்வதில்லை, ஆனால், இறப்பின் பின் உடல் உலர்வதால் நகத்தைச் சுற்றி உள்ள தோல் சுருங்குகிறது. இதனால் நகம் நீண்டு வளர்ந்துள்ளதுபோல் காட்சியளிக்கிறது.

இறந்த மனிதனின் தாடையிலுள்ள தோலும் உலர்கிறது. இதனால் மண்டை ஓட்டை நோக்கி தோல் இழுக்கப்படுகிறது. இதனால் பார்ப்பதற்கு முடி அதிகரித்துள்ளதுபோல் தெரிகிறது.

எனவே திரைப்படங்களில் இனி நீண்ட நகங்களுடனும் நிமிர்ந்து நிற்கும் முடியுடனும் சவப்பெட்டிக்குள்ளிருந்து எழுந்து வரும் உருவத்தைப்பார்த்து பயப்படாதீர்கள். இத்தகைய விஷயங்கள் கதைகளிலும் திரைப்படங்களிலும் மட்டுமே சாத்தியம், உண்மையில் அல்ல.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்