அறம் கொண்ட தமிழர் தேர்தல்

tamilcnn.lk

அகிலன் முத்துக்குமாரசுவாமி

தமிழ் மக்கள் ஒருபோதும் பௌத்த மதத்திற்கோ சிங்கள மக்களுக்கோ எதிராக நயவஞ்சகம் கொண்டு செயற்பட்டது கிடையாது. 1930 களில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி முன் மொழியப்பட்ட போது, சிங்கள மக்களிடமிருத்து பிரிந்து சென்று வாழ விரும்பவில்லை. பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுதந்திரம் வழங்க முற்பட்ட போது தமிழர்களின் பூர்விகத் தாயகமான வடக்கையும் கிழக்கையும் தனி நாடாக தமிழர்களிடம் கையளிக்க முற்பட்டார்கள். அன்றைய தமிழ் தலைமைகள் ஆட்சிக்கோ தனி நாட்டுக்கோ ஆசைப்பட்டவர்களல்ல என்பதையும் சிங்கள மக்களை தங்களில் ஒருவராகவும் கொண்டு தமக்கான தனி நாட்டை நிராகரித்தனர்.

நேபாள்த்தில் பிறப்பெடுத்த பௌத்த மதத்தை,  இந்தியாவிலும் நேபாலத்திலும் புறக்கணிக்கப்பட்டிருந்த காலத்திலேயே தமிழ் மன்னர்கள் உலகமெங்கும் பரவுவதற்கு முன் நின்றார்கள். பௌத்த தமிழ் துறவிகள் இலங்கையிலும் உலகின் பல பாகங்களுக்கும் பௌத்தம் பரவுவதற்கு பெரும் பங்காற்றினார்கள். இவைகளின் விளைவே உலகில் அழிந்து போன பாளி மொழியும் தமிழும் கலந்து உருவாகிய சிங்கள மொழி. இவைகள் தமிழர்களின் உயரிய பண்பை உலகிற்கு பறைசாற்றி நிற்கிறது.

இலங்கை சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே நூற்றண்டுகளுக்கு மேலாக ஓய்வின்றி சுதந்திரமின்றி உழைத்த தமிழ் மக்களின் குடியுரிமையை ஐக்கிய தேசியக் கட்சி என்று வாயளவில் பேசும் கட்சி தயவு தாட்சண்யமின்றி பறித்தெடுத்தது. அன்று உருப்பெற்றதே தமிழ் அரசுக் கட்சி. எழுபது ஆண்டுகளாக அது வரித்துக் கொண்ட கொள்கையான தமிழ் மக்களின் சுய ஆட்சி கொள்கையில் இன்றும் உறுதியாக நின்று போராடி வருகிறது.

இலங்கையின் சுதந்திரத்திற்கு பின், ஆட்சிக்கு மாறி மாறி வந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் உலகின் மிகப் பழைமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை அவர்களின் பூர்வீக தேசத்திலேயே பாவனையற்ற மொழியாக்கினார்கள். செல்வச் செழிப்புடன் தங்கள் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள், இலங்கை தமது தேசமென எண்ணி சிங்கள பகுதிகளுக்கும் சென்று பல துறைகளின் முன்னேற்றத்திற்கு பாடு பட்டனர் இவ் அப்பாவித் தமிழ் மக்களை இக் கட்சிகள் தொடர்ச்சியான இனக்கலவரங்களை ஏற்படுத்தியும் துன்புறுத்தியும் வற்புறுத்தியும் அழித்து வந்தது. தமிழ் மக்களின் உயிர் மூச்சாக விளங்கிய கல்வியை தரப்படுத்தல் மூலம் அழிக்க முற்பட்டது. இப்படியான தாங்க முடியாத வேதனைகளே தமிழ் மக்களை போராடச் செய்தது. இன்று இலங்கையிலும் உலகமெங்கும் ஏதிலிகளாக வாழ்கிற தமிழ் மக்கள் அடக்கு முறையின் அடையாளங்கள். குடும்பங்களை இழந்து தெருவோரத்தில் வாழும் தமிழ் மகன் முதல் செல்வந்தர்களாக வாழும் தமிழ் மகன் வரை யுத்த வடுக்களை காவி நிற்பவர்களே. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியுமே போட்டி போட்டு தமிழ் மக்களை அழித்து வந்தது. இவ் இரு கட்சிகளின் கூட்டு அங்கமே மஹிந்த ராஜபக்ஸ, ஜீ. எல் பீரிஸ் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இம் மூன்று இன வாதக் கட்சிகளின் ஒட்டுக் கட்சியாக மத வெறிக் கட்சிகளும் உலகில் செத்துப்போன இடது சாரிக் கட்சிகளும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு உள்ளூர் ஆட்சித் தேர்தலில் ஒரு புள்ளியில் நிற்கின்றனர்.

தமிழர்களின் அரசியல் தீர்வே இலங்கையின் எதிர் காலத்தை நிர்ணயம் செய்யும் என்பதை மறைத்து இன்றைய நிலையில், அபிவிருத்தி என்னும் ஆபத்தான மாயக் கருப்பொருளை முன் தள்ளி உள்ளூர் ஆட்சித் சபைத் தேர்தலில் தமிழ் பிரதேசங்களில் வெற்றி கொள்ள கங்கணம் கட்டி நிற்கிறது சிங்கள இன வாதக் கட்சிகள். நவீன உலக வாழ்வையும் அபிவிருத்தி கண்ட சுற்றாடலையும் அழித்த அரசு மீண்டும் தமிழ் மக்களுக்கு இவைகள் கிடைக்கும் படி செய்யும் என்பதில் சிறு துளியும் நம்பிக்கை இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச துறைமுகங்களையும் தெருச் சாலைகளையும் கொண்டு வாழ்ந்த தமிழ் மக்களுக்கு இவைகளை அபிவிருத்திகள் என்று காதில் பூ சுற்றுவது ஓரு வேடிக்கையே.

பொட்டு, பூ, வேட்டி, சால்வை என்று தமிழர் கலாச்சார அடையாளங்களுடன் சிங்கள இனவாதக் கட்சிகள், உள்ளூர் ஆட்சி சபையை விண் உலகுக்கு எடுத்துச் செல்லப் போகிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தி தமிழ் முகவர்களை உள்ளூர் சபைத் தேர்தலில் பல தந்திரங்களுடன் நிறுத்தியுள்ளார்கள். இம் முகவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவதாகவும் தமிழர்களுக்கு சுய ஆட்சியை பெற்றுத் தருவதாகவும் கூறிக் கொண்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து உங்களை ஏமாற்றுகிறார்கள், உங்கள் வாக்குகளை உண்மையை சொல்லும் எங்களுக்கு போடுங்கள் என்று பெரும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இலங்கை மக்களின் சீரழிவுக்கு பிரதான காரணியான இனப் பிரச்சனையை உள் நாட்டிலேயே தீர்க்க முற்பட்டனர் முன்னைய தமிழ் தலைவர்கள், ஆனால் அம் முயற்சி வெற்றி பெறவில்லை. பின்பு பிராந்திய அரசால் மேற் கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வி கண்டது. இன்று சர்வ தேசத்தின் ஈடுபாட்டுடன் இனப் பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகள் நடைபெறுகிறது. நாடுகளுக்கு நாடு உள் நாட்டுப் பிரச்சனைகள் வித்தியாசமான முறைகளிலேயே கையாளப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சனையை தங்களுக்குள் பேசித் தீர்கப்படவேண்டும் என்பது சர்வ தேச நாடுகளின் இன்றைய நிலைப்பாடு. இதற்கமைய ஒழுக்கமான முறையில், சர்வ தேச நாடுகளின் ஆலோசனையும் பேச்சுவார்த்தை தொழில் நுட்பத்தையும் பெற்று இலங்கை அரசுடன் பேசி வருகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இப் பேச்சுவார்தை முயற்சி வெற்றி பெறுவதற்கு புலம் பெயர்ந்த தமிழர்களும் பெரும் பங்காற்றி வருகிறார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகளுடன் சர்வ தேச நாடுகளின் பிரதிநிதிகள் தொடர்புகள் வைத்துக் கொள்ள அறவும் விரும்பவில்லை. இதற்கான சரியான காரணமும் இருக்கத் தான் செய்கிறது. அதாவது அவர்களின் பேச்சிற்கும் செயற்பாட்டிற்கும் எந்த தொடர்புமில்லை, சர்வ தேச நாடுகளின் எதிரிகளாக தமிழ் மக்களை சித்தரிப்பது, உள் நாட்டு அயல் நாட்டுப் புலனாய்வாளர்களால் இவர்கள் இயக்கப்படுவது, ஒரு தேசிய இனத்தின் பிரதிநிதிகளாவதற்கு தகுதியற்றவர்கள் என்பது வெளிப்படையாக தெரிவது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

அரசியல் தீர்வுக்கான வரைபுகள் அரைவாசித் தூரம் கடந்து விட்ட நிலையில் இதை மேற்கொண்டு சரியான பாதையில் எடுத்துச் செல்வதானால் தமிழர்களின் பாரம்பரிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் தமது பெரும் பலமான வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழ் மக்களின் பணத்தையும், நின்மதியையும், கொள்ளையடிக்க வந்துள்ள போலிக் கட்சிகளையெல்லாம் அரசியலிலிருந்து நிரந்தர நீக்கம் செய்யும் தேர்தலாக இவ் உள்ளூர் ஆட்சித் சபைத் தேர்தலை தமிழ் மக்கள் கையில் எடுக்க வேண்டும். பொய் பிரச்சாரம் செய்யும் போலித் தமிழ் கட்சிகளையும் தமிழர்கள் மேல் இனவாதத்தை ஏவி விட்ட சிங்களக் கட்சிகளையும் தமிழர் பகுதியிலிருந்து முற்றாக விரட்டியடிக்கும் தேர்தலாக தமிழ் மக்கள் இம் முறை தேர்தலைப் பார்க்க வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்