தமிழ் தேசியம் எங்கள் உயிருடன் கலந்துவிட்ட உணர்வு, போராளி யோகன்

tamilcnn.lk

தமிழர்களுடைய பெருந்தலைவன் நடத்திய அந்த ஆயுதப் போராட்டம் எவ்வாறு வஞ்சகமான முறையில் மௌனிக்கச் செய்யப்பட்டதோ அதே போன்றுதான் தமிழர்களின் அரசியல் பலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பை இன்று பலமிழக்கச் செய்து தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை கிடைக்கவிடாத ஒரு வஞ்சக வியூகம் தற்பொழுது இங்கே அரங்கேற்றப்படுகின்றது.

ஒரு கட்சியை சுற்றி வளைத்து , அனைத்துக் கட்சிகளும் தாக்குகிறதென்றால், ஏனென நாம் ஒரு தரம் சிந்திப்போம். அன்று முள்ளிவாய்க்காலில் எங்களுடைய எழுச்சி மிக்க போராட்டத்தை அடக்குவதற்கு எத்தனை நாடுகள் சுற்றிவளைத்ததோ அதேபோன்றுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சுற்றித் தாக்குகிறார்கள். இதன் நோக்கம், என்ன இதன் வியூகம் எங்கே வகுக்கப்படுகின்றது என்று நோக்குவோமானால், அனைத்தும் புரியும். தமிழர்களின் தலைவன் ஏற்படுத்திய அந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆசனம் தரவில்லை என்பதற்காக உடைத்து வெளியேறிய சைக்கிள் இன்று, தேசியப் பேரவை எனச் சொல்லிக் கொண்டு தேசியம் பேசுகிறது.

தேசியப் பட்டியலூடாக ஆசனம் கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டமைப்பை விட்டு வெளியேறிய சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் தோற்றுப்போன அரசியல்வாதி ஆனந்தசங்கரியுடன் சேர்ந்து சூரியனை உதிக்க வைப்பதாகச் சொல்கிறார். கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து, மணற்கொள்ளை செய்து எமது கனிம வளத்தை அழித்தவரும், அடாவடி அராஜகம் புரிந்தவருமான டக்ளஸ் தேவானந்தா வீணையே வாழ்வு தரும் என்கிறார். பதவிக்காக கட்சியின் சின்னத்தை விற்று வெற்றிலையை மாற்றிய இவர், இப்பொழுது வீணையே வாழ்வு தரும் என்கிறார். வீணை வாழ்வு தருமா அல்லது வாழ்வை எடுக்குமா என்பதை நாம் அறிவோம்.

எமது உறவுகள் வலிந்து காணாமற் போய், அதே உறவுகளின் தாய்மாரை நடுத்தெருவில் வைத்து வேடிக்கை பார்க்கும் நல்லாட்சி அரசின் பங்காளிக் கட்சிகள், ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன தங்கள் இரத்தக்கறை படிந்த கையையும், எங்கள் நிலங்களை இடித்தழித்த யானையையும் எங்களிடம் கொண்டு வந்திருக்கின்றன. இவர்கள் அனைவரின் பொது எதிரி தற்பொழுது தமிழ் தேசியக் கூட்மைப்பே! இது ஏன்?
அரசியல்ரீதியாகப் பலம்பெற்ற எங்கள் பெருந்தலைவன் உருவாக்கிய கட்சியைத் தக்க வைப்பதன் மூலம் எங்கள் அதிகாரப் பகிர்வுக்காக முன்னகர்த்தலை சிதைப்பதே இதன் நோக்கம் என்பதை நாங்கள் அனைவரும் உணர்வோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்