தமிழ் மக்களின் கனவு நனவாக எல்லோரும் வீட்டுக்கு வாக்களிப்போம் – உரிமைகளை வென்றெடுப்போம் – யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம்

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

இத்தேர்தலில் எல்லா மக்களும் தவறாமல் காலையில் சென்று வாக்களிக்க வேண்டும். இவ்வாறு வாக்களிப்பதன் மூலம் மோசடிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு குடிமகனும் வாக்கின் மூலம் தமது உரிமைகளை வென்றெடுப்பதுடன் எதிர்பார்க்கைகளையும் நிறைவேற்றக் கூடியதாக இருக்கின்றது.

ஒரு ஜனநாயக நாட்டில் எல்லா விடயங்களையும் இறுதியில் நிர்ணயிப்பது மக்களின் வாக்குரிமையே என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் இதுவரை தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் ஓரளவு ஈடு செய்யக் கூடியதாக இருக்கின்றது.

தமிழ் மக்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற அளவிற்கு உடமைகளை இழந்தோம், உறவுகளை இழந்தோம், உயிர்களை இழந்தோம், உறுப்புக்களை இழந்தோம். இத்தகைய இழப்புக்களை சந்தித்தவர்களுக்கும், துன்பங்களைச் சுமந்தவர்களுக்கும் தான் இதன் வலிகள் தெரியும்.

இவ்வலிகளை மக்கள் மறந்துவிடவில்லை. ஆகவே இவ் இழப்புக்களுக்கு ஈடான அரசியல் தீர்வினை பெற்றுக் கொள்வதே தர்மம் ஆகும். ஆனாலும் வெண்ணை திரண்டு வரும்போது தாளி உடைந்தது போல ஆகாமல் தமிழ் மக்களுக்கு ஓர் நீதியான தீர்வு கிடைக்க வேண்டும். இத்தீரவு கிடைப்பதற்கு சகல அரசியல் தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியிருக்கின்றது.

தமிழினம் பல்வேறு குழுக்களாக தற்போது பிரிந்து செயற்படும்போது தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தினை பலவீனப்படுத்துவதாகவே அமைந்திருக்கும். தமிழ் மக்கள், அரசியல் கட்சிகள் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து செயற்படுகிறார்கள். இவ்வாறு பிரிந்து செயற்படுவதற்கான அடிப்படை கருவாக பதவி முதன்மை பெறுகின்றது.தமிழ் மக்களுடைய பிரச்சினையோ அல்லது கொள்கையோ முதன்மை பெறவில்லை.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் ஆதல், தேசிய பட்டியல் மூலம் எம்.பி பதவி பெறுதல், மாகாணசபை உறுப்பினர் பதவி, உள்ளுராட்சி மன்றங்களின் தலைமைப்பதவி, உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர் பதவி போன்றவற்றை எதிர்பார்த்தவர்கள், அது கிடைக்காத சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுடைய ஒரே பலமான தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படுகின்றனர், பலவீனப்படுத்த முனைகின்றனர், பிரிந்து நிற்கின்றனர், விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இத்தகைய செயற்பாடுகளின் மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படுவோர்களை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவர் அவர்களால் தூர நோக்கோடு உருவாக்கப்பட்டு தேர்தல் சின்னமாக தமிழரசுக் கட்சியின் வீடு தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முனைந்துள்ளது.

இச்செயலை மக்கள் வரவேற்கின்றனர். இவர்களது இணைவை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நிபந்தனைகள் இன்றி தமிழ் மக்களின் நலன்கருதி இணைந்து கொள்ள வேண்டும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ்மக்களுடைய உரிமைக்காக பேரம் பேசுகின்ற சக்தி அதிகரிக்கும். அரசும் பேரம் பேசும் போது அதற்கான முக்கியத்துவத்தை அளிக்கும். எல்லோரும் ஒன்றிணைந்து குறைகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாமே தவிர ஆனால் பிரிந்து செல்லக்கூடாது. வளர்ந்த மரத்திலிருந்து மக்கள் கனிகளை பெற விரும்புகின்றனர். புதிய மரங்கள் நாட்டி வளர்த்தெடுத்து கனி பெறும் நிலையில் மக்கள் மனோநிலை இல்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழ் இனம் என்ற அடிப்படையில் ஒரே இனமாக உருவாக்கப்பட்டது. அது தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வந்தது. இன்று தேர்தலில் வெற்றி கொள்வதற்காக தமிழ் இனத்தினை சமய அடிப்படையில், பிரதேச அடிப்படையில், கட்சிகளின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தி தாம் வெற்றிபெற முனைகின்றனர். இது ஏனையவர்கள் செய்கின்ற தவறையும் நியாயப்படுத்துவதாக அமைந்திருக்கும். தமிழ் மக்கள் ஒருபோதும் சமய அடிப்படையில், பிரதேச அடிப்படையில் பிரித்தாழ்வதனை அனுமதிக்க மாட்டார்கள்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பிரதேச அபிவிருத்தியையும், மக்களின் அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதாக அமைந்துள்ளது. அதேபோல தமிழ்மக்களின் அபிலாசைகளையும் கொள்கை உறுதியினையும் அரசிற்கு எடுத்துக்காட்டக் கூடியதாக இருக்கின்றது. புதிய அரசியல் அமைப்பின் பிரகாரம் வட்டாரத் தேர்வுமுறை, விகிதாசாரத் தேர்வுமுறை, பெண்களுக்கும் இளைஞர்களுக்குமான ஒதுக்கீடு என்பன வழங்கப்பட்டுள்ளன. இதனால் கிராமிய மட்டத்திலிருந்து அபிவிருத்தியினை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இதற்கு உறுதியானதும், தூய்மையானதுமான நிர்வாகம் பெரும்பாண்மை வெற்றிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டி இருக்கின்றது. உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலில் வெற்றி கொள்பவர்களைவிட தோல்வி அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வெற்றி தோல்வியினை சமமாக மதித்து வெற்றி பெற்றவர்கள் கட்சி வேறுபாடின்றி பிரதேச நலன்கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

தோல்வி கண்டவரும் பிரதேச வளர்ச்சிக்காக இணைந்து செயற்பட்டு தமது பங்களிப்பினை வழங்க வேண்டும். உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதிவிகள் பிரதேச அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே பதவி, சமூக அந்தஸ்து, வருமானம் பெறல், பொழுதுபோக்கு போன்ற நோக்கங்கள் இன்றி இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் கடந்த காலத்தில் அனுபவித்த துன்பங்களை மறப்பதற்கில்லை. ஒவ்வொருவருடைய சேவைகளையும் மதிப்பீடு செய்து வைத்துள்ளார்கள்.

ஆகவே தமிழ்மக்கள் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக பின்வரும் விடயங்களை கருத்திற்கொண்டு வாக்களிக்க வேண்டுகின்றோம்.

* தமிழ் மக்களுக்கென இருக்கின்ற பலம் வாய்ந்த ஒரே கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
* காலையில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும்
* இதுவரையில் அனுபவித்த இழப்புக்களையும், துன்பங்களையும் ஈடுசெய்யக்கூடிய வகையில் வாக்களிக்க வேண்டும்.
* சமகாலத்தில் காணப்படும் அமைதியான வாழ்வு தொடர்வதற்கும் இதற்கு மேலாக உரிமையுடன் இணைந்த சமாதான வாழ்வு பெறுவதற்கும், தந்திரோபாயமான அணுகுமுறைகளை மேற்கொள்ளக் கூடியதாக வாக்களித்தல்.
* தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியினை அதிகரிக்க வேண்டும்.
* தலைவர் அவர்களால் தூர நோக்குடன் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேரம்பேசும் சக்தியினை அதிகரிப்பதற்கும் தியாகங்களால் உருவாக்கப்பட்ட நோக்கங்களை அடைவதற்கு வழிவகுக்க வேண்டும்.

ஆகவே மேற்கூறிய அம்சங்களைக் கருத்திற்கொண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எல்லோரும் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்போம். தூய்மையான, திறமையான, நிலையான நிர்வாகத்தை உள்ளுராட்சி மன்றங்களில் உருவாக்குவோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்