தேர்தல் பிரசாரங்கள் முடிவு: மீறினால் கடும் நடவடிக்கை

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள், 07.02.2018 நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தன.

இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி நடப்போருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் கடமைகளில் 65,658 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, 13,420 மத்திய நிலையங்களில் 26,840 பொலிஸார் கடமையாற்றவுள்ளதாகவும், ஒரு மத்திய நிலையத்துக்கு 2 பொலிஸார் வீதம் கடமைகளில் ஈடுபடுவரெனவும் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரங்கள் யாவும், 07.02.2018 நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளதுடன், இது தொடர்பான விசேட வர்த்தமானி ஒன்று தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி, 07.02.2018 திகதி  9 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகளில் கூட ப​தாதைகள், சுவரொட்டிகள் உள்ளிட்ட எதனையும் காட்சிப்படுத்துவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வேட்பாளர் பயணிக்கும் வாகனத்தில் ஒரேயொரு கட்சிக் கொடியை பறக்க விடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கு நாளை (11) வரையும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், அனைத்து வாக்களிப்பு மத்திய நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில், நடமாடும் பொலிஸ் நிலையங்கள் 3,225 அமைக்கப்பட்டுள்ளதுடன், அடையாளங் காணப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு பொலிஸ் நடமாடும் சேவையுடன் பொலிஸ் விசேட படையணியினர் இருவர் கடமையாற்றுவர். மட்டுமின்றி 13,552 சிவில் பாதுகாப்பு தரப்பினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவர்.

அத்துடன், பல பிரதேசங்களின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேடப் படையணியின் நடமாடும் பிரிவு கடமையாற்றவுள்ளதாகவும், இதற்கென 99 பொலிஸ் விசேட படையணியின் நடமாடும் பிரிவு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதில் 1,174 விசேட படையணியினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியிடும் 25 மத்திய நிலையங்களுக்கு 1,275 பொலிஸாரும், கலகம் அடக்கும் பொலிஸார் 140 – 1,106 பொலிஸ் அதிகாரிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் 464 அமைக்கப்பட்டுள்ளதுடன், 3,248 பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த கடமைகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்கள் 08.02.2018 மாலை குறித்த பொலிஸ் பிரிவுகளுக்குச் சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்று  09.02.2018 ஆம் திகதி காலை தொடக்கம் பணியில் ஈடுபடுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், 07 முதல் 10ஆம் திகதி சனிக்கிழமை வரையான காலப்பகுதி, அமைதிக் காலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்வமைதிக் காலத்துக்கு முன்னுரிமை அளிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால், அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிகத் தவிசாளர் எம்.எம்.மொஹமட், தேர்தல் பிசாரக் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டல், ஊடகங்கள் வாயிலாக, தேர்தல் பிரசார விளம்ப​ரங்களை வெளியிடல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக, தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளல் போன்றன, இன்று (08) முதல் தடை செய்யப்பட்டுள்ளவென்றுக் கூறினார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய, மேற்படி விவரங்கள் அடங்கிய வர்த்தமாளி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று நள்ளிரவு முதல், தேர்தல் பிரசாரங்கள் நிறுத்தப்படுவதானது, சாதாரணமானதும் நேர்மையானதுமான தேர்தல் நடவடிக்கைகளுக்கு வலிவகுக்கும் என்றுத் தெரிவித்த மேலதிகத் தவிசாளர், சட்டத்துக்குட்பட்டு வேட்பாளர்கள் நடந்துகொள்வார்களென, தேர்தல்கள் ஆணைக்குழு நம்புவதாகவும் குறிப்பட்டார்.

இதையும் மீறி, தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிகத் தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வாக்களிப்பு தினத்தன்று, ஊர்வலம் நடத்தவோ அல்லது கோசமிடவோ முடியாதென்றும் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு, பகிரங்கக் கூட்டங்களை நடத்த முடியாதென்றும் குறிப்பிட்டது.

வாக்களிப்பு தினத்தன்று, வாக்கெடுப்பு நிலையமொன்றில் இருந்து 400 மீற்றர் பரப்பினுள் தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் பற்றி, தேர்தல்கள் ஆணைக்குழுவினால், அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தின் கீழ், இப்பரப்பு 400 மீற்றராக வரையறுக்கப்பட்டு உள்ளது. இதற்கமைய, ஒருவருடைய வாக்கைக் கெஞ்சிக் கேட்டல், ஒருவருக்கு வாக்களிக்குமாறு பரிந்துரைத்தல், ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு அல்லது வாக்களிக்க வேண்டாமெனக் கட்டாயப்படுத்துதல் என்பன, தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், தேர்தலுடன் தொடர்புடைய ஏதேனுமோர் அலுவலக முறையான துண்டுப்பிரசுரம், ஒட்டு விளம்பரம், சுவரொட்டி, கொடிகள், பதாதைகள், காட்சிப்பத்திரங்கள், அறிவித்தல் பத்திரங்கள், சித்திரம், வேட்பாளரொருவரின் புகைப்படம் அல்லது கட்சியின் சின்னம் சுயேட்சைக்குழுவின் சின்னம் என்பனவற்றையும் காட்சிப்படுத்த முடியாதெனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்