பிரதமர் பதவி பிச்சையாக வேண்டாம்! – நாடாளுமன்றத் தேர்தலை உடன் நடத்துமாறு மஹிந்த வலியுறுத்து

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை சீர்செய்ய பிரதமர் பதவியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும் ஏற்குமாறு அரச உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை நான் ஏற்கப்போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலொன்று விரைவில் நடத்தப்படவேண்டும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி பார்க்கலாம். மக்கள் சக்தி எங்களுடன் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கு செல்வதே இப்போதைக்கு சிறந்த வழி.”

tamilcnn.lk

– இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பிரதமர் பதவி மற்றும் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்குமாறு உங்களிடம் கேட்கப்படுகிறதே அதற்கு என்ன பதிலை கூறப்போகிறீர்கள் என்று குறித்த ஊடகம் கேட்டபோதே மேற்கண்டவாறு மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தேர்தல் வெற்றியையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் சிரேஷ்ட அமைச்சர்கள் என்னுடன் தொடர்புகொண்டு வாழ்த்துக் கூறி வருகின்றனர். அவர்களில் பலர் நான் கூப்பிட்டால் என்னுடன் இணைந்து செயற்படவும் தயார். ஆனால், மக்களை இந்தக் காட்டாட்சியிலிருந்து மீட்பதே எனது நோக்கம்.

பிரதமர் பதவியோ அல்லது கட்சித் தலைமைப் பதவியோ எனக்குக் கிடைத்தால் அது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. கிராமங்கள் எனது கட்டுப்பாட்டில் வந்தமைபோன்று முழு நாடும் இவர்களின் அடிமைப்பிடியிலிருந்து மீண்டு என்னிடம் வரவேண்டும். அதற்கு நாடாளுமன்றத் தேர்தலொன்று வேண்டும்.

அந்தத் தேர்தலில் எங்களுக்குக் கிடைக்கும் மக்கள் ஆணையை கொண்டு அடுத்தகட்டத்துக்கு நாங்கள் செல்லலாம். பதவி ஆசைகள் காட்டி எங்களுக்குக் கயிறுகொடுக்க நினைக்கிறார்கள்.அவர்களின் எண்ணம் நிறைவேறாது” – என்று மஹிந்த கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்