தீர்வு குறித்து சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்! – மஹிந்தவை வரவேற்று சம்பந்தன் கருத்து

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளது. எனவே, அவர் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும். இந்தத் தேசிய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இதனைத் தீர்ப்பேன் என்று அவர் ஏற்கனவே சர்வதேசத்துக்கு உறுதியளித்துள்ளார். அந்த வாக்குறுதியை மஹிந்த நிறைவேற்ற வேண்டும். அவரை நாங்கள் வரவேற்கிறோம்.”

tamilcnn.lk

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும் எழுச்சி பெற்று தெற்கில் பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றியுள்ள நிலையில் இரா.சம்பந்தன் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பில் இரா.சம்பந்தன் கொழும்பு தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளதாவது:-
“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 40 சபைகளைக் கைப்பற்றியுள்ளது. ஒரு பலமான அதிகார ஆட்சி வடக்கு, கிழக்கில் ஏற்படவேண்டும். அவ்விதமான ஒரு பலமான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நாங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து இயங்கவேண்டி இருந்தால் அதற்குப் பின்னிற்கமாட்டோம்.
மக்களின் நலன் கருதி  – மக்களுக்கு நாங்கள் ஆற்றவேண்டிய தேவை கருதி ஒற்றுமையை ஊக்குவித்து அதிகாரம் உள்ள ஓர் ஆட்சியை அமைப்பதற்கு எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
ஆனால், எந்தக் கட்சியுடன் நாங்கள் கூட்டுச் சேர்வது என்பது பற்றிக் கவனமாக ஆலோசிப்போம். எமது கொள்கைக்கு மாறான கட்சிகளுடன் கூட்டுக்கு இடமில்லை.
தேசிய அரசுக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவின் கொள்கைக்கும் சம்பந்தமில்லை. தேசிய அரசு தனது கொள்கையின் அடிப்படையில் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட பணிகளைத் தொடரவேண்டும்.
ராஜபக்‌ஷவின் அனுமதியைப் பெற்று தேசிய அரசு நிறுவப்படவில்லை. கணிசமான அளவு தூரம் பயணம் செய்து விட்டு அது முடிவடைய முதல் அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்கமுடியாது.
மஹிந்தவை நாம் வரவேற்கிறோம். அவரை நாங்கள் எதிரியாகக் கருதவில்லை. இது பற்றி நான் நாடாளுமன்றத்திலும் கூறியுள்ளேன். நீங்கள் மக்களிடத்தில் ஒரு மதிப்புப் பெற்ற தலைவர். ஒரு நல்ல கருமத்தை நாட்டுக்காக நிறைவேற்ற உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவை. அந்த ஒத்துழைப்பை நீங்கள் நல்க வேண்டும் என்று நாங்கள் கேட்டிருக்கிறோம்.
இந்தத் தேர்தல் வெற்றி மஹிந்தவின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளது. எனவே, அவர் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும். இந்தத் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இதனைத் தீர்ப்பேன் என்று அவர் ஏற்கனவே சர்வதேசத்துக்கு உறுதியளித்துள்ளார். அந்த வாக்குறுதியை மஹிந்த நிறைவேற்றவேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்ற அனைத்துக்  கட்சித் தலைவர்களையும் நாம் மதிக்கின்றோம். எமக்கு அரசியல் எதிரிகள் என்று எவரும் கிடையாது. நாட்டின் நிலையான ஒரு சமாதானத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். பிரிக்கப்பட்டாத நாட்டுக்குள் தீர்வு ஒன்று பெற உதவ வேண்டும்” – என்று கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்