தமிழர்களுக்குத் தீர்வு வரும் வரையில் தெற்கில் எந்த அரசுக்கும் ஆதரவில்லை! – கூட்டமைப்பு திடமான முடிவு 

tamilcnn.lk

தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில், தெற்கில் எந்த அரசிலும் அங்கம் வகிப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான – திடமான தீர்மானத்தை எடுத்துள்ளது.
கொழும்பு அரசியலில், கூட்டு அரசின் ஆட்சி முடிவுக்கு வந்து தனிக் கட்சி ஆட்சி மலரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடும் என்று பரவலான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கூடி ஆராய்ந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, அந்தக் கட்சியின் பொருளாளர் பொ.கனகசபாபதி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், அந்தக் கட்சியின் செயலர் ந.சிறீகாந்தா, புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், அந்தக் கட்சியின் உறுப்பினர் ராகவன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
“தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில் தெற்கில் எந்த அரசிலும் அங்கம் வகிப்பதில்லை என்று கடைப்பிடித்து வரும் கொள்கையை தொடர்வோம். தீர்வு விடயங்களில் தெற்கில் ஆட்சிபீடமேறும் அரசுகளுக்கு அழுத்தங்களையும் – நெருக்கடிகளையும் கொடுப்போம். அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் தெற்கு அரசு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவோம்” என்று இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்