மன்னாரில் இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்படுவதினை கண்டித்து மகஜர் கையளிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக  இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வரும் சம்பவத்திற்கு மன்னார் மாவட்ட இந்து மக்கள் தமது கண்டனத்தை தெரிவித்ததோடு,இன்று புதன் கிழமை (14) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.
-மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வந்த சம்பவத்தை கண்டித்தும், கடந்த திங்கட்கிழமை இரவு மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சிலைகள் உடைக்கப்பட்டமை மற்றும் திருடிச் செல்லப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி தமது கண்டனத்தை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கைளிக்கும் வகையில் மாவட்டச் செயலக நிர்வாக அலுவலகரிடம் தமது மகஜரை கையளித்துள்ளனர்.
குறிப்பாக இந்து மக்கள் உணர்வோடு அனுஸ்ரிக்கும் சிவராத்திரி தினத்தில் மிலேச்சத்தனமாக ஆலய விக்கிரகங்களை உடைத்தும், களவாடிச் சென்று இந்து மக்களின் உணர்வை கொச்சைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நாசகாரச் செயலை மன்னார் மாவட்ட இந்து மக்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
-தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் இவ்வாறு இந்து விக்கிரகங்களை உடைத்தும், களவாடிச் செல்கின்ற சம்பவங்கள் உடன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,மன்னார் மாவட்டத்தில் மத ஒற்றுமையை கெடுக்கும் வகையில் இடம் பெருகின்ற குறித்த சம்பவங்களுக்கு பொலிஸாரும்,உரிய அதிகாரிகளும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கலந்து கொண்டிருந்த மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
 
-மன்னார் நிருபர்-

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்