வர்த்தக, சிவில் அமைப்புக்களின் யோசனையை ஏற்று வென்ற இடங்களில் ஆட்சி! – கூட்டமைப்பு தீர்மானம் 

tamilcnn.lk

“கூடிய ஆசனங்களைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும். ஏனைய தமிழ்க் கட்சிகள் அதற்குத் தடையாக இருக்கக் கூடாது. ஏனைய தமிழ்க் கட்சிகள் கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். அதற்கு கூட்டமைப்பு தடையாக இருக்காது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து, இந்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி நிலைப்பாட்டை அந்தக் கட்சி எடுத்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வடக்கில் 32 சபைகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொங்கு சபைகள் அமைந்தால், அவற்றை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்ல முடியாது. மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியாத நிலைமை ஏற்படும். இதனைக் கருத்தில்கொண்டு வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தீவிரமான முயற்சிகளை எடுத்திருந்தன.
“சபைகளை வினைத்திறனுடன் நடத்துவதற்காக, கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் நாம் ஆட்சி அமைப்போம். ஏனைய தமிழ்க் கட்சிகள் அதற்குத் தடையாக இருக்கக் கூடாது. ஏனைய தமிழ்க் கட்சிகள் கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். அதற்கு நாம் தடையாக இருக்கமாட்டோம்” என்று கூட்டமைப்பின் நேற்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
……..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்