தமிழக உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு தமிழக வளங்களை அழிக்கும் மத்திய அரசின் அடாவடித்தனத்தையும், அதற்கு அடிபணிந்து போகும் மாநில அரசையும் வன்மையாக கண்டிக்கிறது, ஆதித்தமிழர் பேரவை. – அதியமான் அறிக்கை.

காவேரி நதி நீர் தொடர்பான வழக்கில், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட முதன்மை அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பில்! காவேரியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, காவேரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது, தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்க முடியும் என்று கூறியுள்ளது.
இது காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் கூறியுள்ள 192 டி.எம்.சி அளவில் இருந்து 177.25 என குறைத்து, 14.75 டிஎம்சி யை பறித்து தமிழகத்திற்கு அநீதியை இழைத்துள்ளது.

அதே நிலையில் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக கூடுதல் குடிநீர் கேட்ட கர்நாடக அரசின் வாதம் ஏற்கப்பட்டு கர்நாடகாவிற்கு கூடுதல் டி.எம்.சி. ஒதுக்கீடு செய்து கர்நாடகாவை மகிழ்ச்சியில் நதியில் நீந்த வைத்துள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பை உறுதி செய்திருந்தாலும், அதை ஏற்கனவே செய்திருக்க வேண்டிய மத்திய அரசு அரசியல் உள் நோக்கத்தோடு காலம் தாழ்த்தி தமிழகத்திற்கு துரோகமிழைத்தே வருகிறது.

தற்போது, காவிரி டெல்டா பகுதியில் சம்பா குறுவை போன்ற பயிர் சாகுபடிகள் கருகிக் கொண்டிருக்கும் நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் படி, 177 டிஎம்சி அளவு தண்ணீரையாவது, உடனடியாக திறந்து பாலைவனமாக மாறிவரும் தமிழக விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு,
தமிழக உரிமைகளை ஒவ்வொன்றாக பறிகொடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, தீர்ப்பை முழுமையாக வாசித்து விட்டுதான் கருத்து சொல்ல முடியும் என்று அலட்சியமாக பதிலளிக்காமல், காவிரி உரிமை பறிபோவதை தடுக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அதில் விவசாய பிரதிநிதிகளையும் பங்கேற்க வைத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

திராவிட இயக்கங்களால் பெறப்பட்ட தமிழக உரிமைகளை, ஒவ்வொன்றாக பறித்து அரசியல் காழ்புணர்ச்சியோடு தமிழக மக்களை பழிதீர்க்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு, அடிபணிந்து செயல்படும் பினாமி அதிமுக அரசு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைக்காமல் தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்