முறிந்தது மைத்திரி – ரணில் உறவு! பிரதமரை வீட்டுக்கு அனுப்ப திரைமறைவில் திட்டம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், எப்படியாவது அவரைத் தூக்கிவிட்டு தனியாட்சி அமைக்க வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் குறியாக இருக்கின்றது. இதற்கு மஹிந்த அணியும் துணைபோயுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத வகையிலேயே சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எந்நேரத்தில் வேண்டுமானாலும் அரசியல் பூகம்பமொன்று ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியிலிருந்து தான் விலகப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தன்னைப் பதவி நீக்கம் செய்யமுடியாது என்றும் இடித்துரைத்துள்ளார். இந்நிலையில், பிரதமரைப் பதவி நீக்குவது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து  நிறைவேற்றுவதன் மூலமே பிரதமரைப் பதவி நீக்க முடியும். எனினும், இது விடயத்தில் ஜனாதிபதியால் நேரடி வகிபாகம் எதையும் வகிக்கமுடியாது. எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களின் ஊடாக இதற்குரிய நடவடிக்கையை அவர் முன்னெடுப்பார் என அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியில் அதிருப்தி நிலையில் இருக்கும் உறுப்பினர்களும் குறித்த பிரேரணைக்குச் சார்பாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றதையடுத்து தேசிய அரசும் ஆட்டம் கண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமித்து கூட்டரசு அமைக்க கைநீட்டிய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், தற்போது கைவிரித்து தனியாட்சி அமைப்பதற்கு முற்படுவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டாக இருந்த இருதரப்பும் தனியாட்சி அமைக்க முற்படுவதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியமைக்க அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இதையடுத்து இருதரப்பும் பெரும்பான்மையைத் திரட்டுவதற்கான முயற்சியில் இறங்கின. 106 ஆசனங்களை வைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்னும் 7 ஆசனங்களே தேவையென்ற நிலையில், ஐ.தே.கவிலுள்ள முக்கியஸ்தர்களையும், சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு அரசமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சிக்கின்றது. கொழும்பில் முகாமிட்டுள்ள அரசியல் பிரமுகர்கள் தொடர் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிச்சுற்று பேச்சுகள் முரண்பாட்டில் முடிந்ததாலும், அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டுமே பிரதமர் பதவியிலிருந்து ரணிலைத் தூக்கிவிட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரி குறியாக இருக்கிறார் என்றும், ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைத்தாலும் அரசைக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி முட்டுக்கட்டையாக இருப்பார் என்றும் அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, அரசியல் குழப்பங்களால் தனது இந்திய விஜயத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரத்துச் செய்துள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, “ஊழலுக்கு எதிரான எனது வாள்வீச்சுப் பயணத்திலிருந்து ஊழல்வாதிகள் தப்பிக்கவே முடியாது” என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவர் இவ்வாறு அறிவித்த பின்னர், கடந்த ஆட்சியில் ஊழல், மோசடியுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள், சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. மாறாக எந்த அமைச்சரவையிலிருந்து தான் வெளியேறினாரோ அந்த அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு தனியாட்சி அமைப்பதற்கு அவர் ஒத்துழைக்கின்றார்.
எனவே, ஊழல்வாதிகளுக்கு எதிரான வாளை இறுதிநேரத்தில், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தனது சகாவாக இருந்த பிரதமர் ரணிலையே பதம் பார்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரி பயன்படுத்தியுள்ளார் என்றும், இது கழுத்தறுப்பு செயல் என்றும் ஐ.தே.க. உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்