அனைத்துலக சமூகம் ரணிலுக்கு நேசக்கரம்! – கூட்டரசு குழப்பினால் ஜெனிவாவில் காத்திருக்கின்றது இராஜதந்திர அடி…

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்குரிய முயற்சியில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இறங்கியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே இருக்கின்றது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசே தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும், இலங்கையின் எதிர்காலத்துக்கு அதுவே சிறப்பான ஆரம்பமாக அமையும் என்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனஅமோக வெற்றிபெற்றதால் தேசிய அரசில் கடும் நெருக்கடி ஏற்பட்டதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்ற தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக இருதரப்பிலும் தனி அரசொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இலங்கை அரசு 2015ஆம் ஆண்டு ஐ.நாவிலும், சர்வதேச ரீதியிலும் கொடுத்திருந்த வாக்குறுதிகளில் பாரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்பட்டவில்லை என்பதுடன், பொறுப்புக்கூறல் விடயத்திலும் மந்தகதியிலேயே கடந்த மூன்று வருடங்களாக அரசின் செயற்பாடு அமைந்துள்ளது. இத்தருணத்தில் நல்லாட்சி அரசை முறுத்துக்கொண்டால் இலங்கை அரசு சர்வதேச அரசங்கில் கடுமையான நெருக்கடிகளை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும் என்று  இலங்கையில் உள்ள சர்வதேச நாட்டு இராஜதந்திரகள் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா ஆகிய நாட்டு இராஜதந்திரிகள் ஜனாதிபதியுடனும் பிரமருடனும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஆலோசனைகளை கூறிக் வருகின்றனர் என அறியமுடிகின்றது.
குறிப்பாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர், அமெரிக்கத் தூதுவர் ஆகியோர் நேரடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காணுமாறும், நல்லாட்சி அரசைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்