அரசியல் தேவையில்லை அபிவிருத்தியே அவசியம்!

அரசியல் நிலமைகளைக் கவனத்தில் கொள்ளாது மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை அரச கொள்கைக்கேற்ப உரிய இலக்குகளை நோக்கி வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அமைச்சுக்களின் செயலர்களுடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்ததாவது,

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் எவ்வித பின்னடைவும் ஏற்பட இடமளிக்காது அமைச்சுக்கள் மற்றும் நிறுவன மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் சில அமைச்சுக்களின் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்த அரசின் கொள்கை ஒருபோதும் மாறாது.

தேர்தல் ஒன்றைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது சாதாரணமானதாகும். அந்த அரசியல் நிலமைகளை கவனத்தில் கொள்ளாது மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை அரச கொள்கைக்கேற்ப உரிய இலக்குகளை நோக்கி வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அமைச்சுக்களின் செயலர்களையே சார்ந்தது.

இந்த நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது நிறுவன ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும். எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்து அந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவும்.

மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டங்களுக்கான நேரசூசி தற்போது வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தி இந்த மாதத்திற்குள் அந்தக் கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.

எதிர்கால் வரட்சி நிலமைக்கு முகம் கொடுத்து காலநிலை மாற்றங்களுடன் விவசாயத்துறை மற்றும் உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து நாட்டின் பல்கலைக் கழகங்களில் உள்ள புவியியல் மற்றும் வானியல் துறை நிபுணர்களுடன் கலந்துரையாடி தேவையான சட்டதிட்டங்களை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கின்றேன் – என்றார்.

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்