தவறான சிகிச்சையால் சிறுமியின் பரிதாப நிலை

கனடாவில் பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் இளம் சிறுமியின் மூளை பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பெற்றோர்கள் மன வேதனையில் உறைந்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பல் சிகிச்சைக்காக Amber Athwal என்னும் நான்கு வயது சிறுமி Dr. William Mather என்னும் பல் மருத்துவரின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.

அங்கு அவளுக்கு பல் சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டது, சிகிச்சைக்குப் பின் அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவள் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் வாழும் நிலைக்கு ஆளானாள்.

பல மாதங்கள் சிகிச்சைக்குப்பிறகு இப்போத்தான் அவளால் கை கால்களை அசைக்கவும், சில வார்த்தைகளையும் பேச முடிகிறது. அவள் நான்கு வயதாக இருக்கும்போதே இரண்டு மொழிகளில் புலமையுடையவளாக இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவளது பெற்றோர் Dr. William Mather மீது 26.5 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

Alberta Dental Association and College என்னும் மருத்துவக் கல்லூரி அமைத்த தீர்ப்பாயம் ஒன்று, ஆறு நாட்கள் நடத்திய விசாரணையில் Dr. William Mather மருத்துவ விதிகளை கடுமையாக மீறியுள்ளதை கண்டறிந்தது.

மேலும் அவர் மீது சாட்டப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

மயக்க மருந்து கொடுக்கும் முன் சிறுமியின் பெற்றோரிடம் ஒப்புதல் வாங்காதது, குழந்தை எப்போது உணவு சாப்பிட்டாள் என்பது குறித்த விவரங்களை விசாரிக்காதது, அறுவை சிகிச்சை முடிந்து வெளியே கொண்டு செல்லப்படுவத்ற்கு முன் மயக்க மருந்து கொடுப்பது நிறுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்யாதது, அறுவை சிகிச்சைக்குப் பின் அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது அவளைத் தொடர்ந்து கவனிக்காதது போன்ற பல முக்கிய விடயங்களில் மருத்துவர் கவனக்குறைவாக இருந்திருக்கிறார்.

பல் சிகிச்சைக்குப் பின் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதை நிர்வகிக்குமளவுக்கு திறமையானவர்கள் Dr. Mather உட்பட அவரது மருத்துவமனையில் யாருமே இல்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாகும்.

இதற்கிடையில் Dr. Mather கடந்த ஆண்டே ஓய்வு பெற்று விட்டதால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை.

Dr. Mather மீது அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடக்க இருக்கிறது, அதன் பின்னரே அவருக்கு என்ன தண்டனை அளிக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் தெரியவரும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்