நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பற்றிய ஒரு மீள் பார்வை!

நக்கீரன்

கொழும்பு தலைநகரில் தமிழ்த் திரைப்படங்களில் வரும் திகில் காட்சிகள் போலவும் திருப்பு முனைகள் போலவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் காட்சிகள் மாறிக் கொண்டிருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் காலத்தில் சனாதிபதி சிறிசேனாவுக்கும் பிரதமர் விக்கிரமசிங்கா இருவருக்கும் இடையே வாய்ச் சண்டை நடந்த வண்ணம் இருந்தன. காரணம் மத்திய வங்கி விற்ற பிணைமுறி தொடர்பாக சிறிசேனா நியமித்த ஆணைக்குழு மத்திய வங்கிப் பிணை முறிவு விற்பனையில் பாரிய ஊழல் நடந்துள்ளதை உறுதி செய்தது. அதனால் கடுப்படைந்த சிறிசேனா முன்னைய இராசபக்சா அரசைவிட விக்கிரமசிங்காவின் ஆட்சி ஊழல் ஆட்சி என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் எதிர்க்கட்சியாகட்டும் அல்லது ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஆகட்டும் தேர்தலுக்குப் பின்னர் அவர்களோடு உறவு வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று சீறினார். சிறிசேனா ஊழலை ஒழிக்க தனது கை வாளைச் சுழட்டப் போவதாகவும் சூளுரைத்தார்.

tamilcnn.lk

கடந்த இரண்டு மாதமாக சனாதிபதி சிறிசேனா பேச்சும் நடத்தையும் இதுவரை காலமும் மக்கள் மனங்களங்களில், முக்கியமாக தமிழ் மக்களின் மனங்களில், அவர் பற்றிய பிம்பம் பலத்த அடிவாங்கியிருக்கிறது. சனாதிபதி என்ற பதவிக்கே இழுக்குத் தேடிக் கொண்டிருக்கிறார். முடிவுகளை எடுக்க முடியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறார். ‘நீயுமா புரூட்டஸ்’ என மற்றவர்கள் அவரைப் பார்த்துக் கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.

இரணில் விக்கிரமசிங்கா பதவி விலகித் தனது இடத்தை நிரப்ப ஒருவரை பரிந்துரை செய்ய வேண்டும் என்று சிறிசேனா வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை இரணில் விக்கிரமசிங்கா நிராகரித்தார். அது மட்டுமல்ல, அமைச்சரவையை மாற்றியமைக்க விடுத்த வேண்டுகோளையும் இரணில் விக்கிரமசிங்கா புறந்தள்ளினார். இந்தக் கட்டத்தில் சிறிசேனா, இரணில் விக்கிரமசிங்காவை பதவியில் இருந்து அகற்ற எல்லாவிதமான பகீர முயற்சிகளையும் மேற்கொண்டார். தனது பரம எதிரியான மகிந்த இராசபச்சாவோடும் தொடர்பு கொண்டார்.

பிரதமர் விக்கிரமசிங்காவை விலத்திவிட்டு அந்தக் கட்சியில் உள்ள ஒருவரைப் பிரதமராக்க சிறிசேனா முயற்சி செய்தார். நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக இருக்கும் கரு ஜெயசூரியாவைக் கேட்டுப்பார்த்தார். அதற்கு அவர் கட்சி சொன்னால் மட்டுமே அது பற்றி யோசிக்க முடியும் என்றார். அவரை விட்டுவிட்டு ஐதேக இன் இன்னொரு மூத்த தலைவரான சஜீத் பிரேமதாசாவைக் கேட்டுப் பார்த்தார். அவரும் மசியவில்லை. பிரதமராக நிமால் டி சில்வாவை, சிறிசேனா நியமிக்கப் போவதாக பேச்சு அடிபட்டது. இரணில் விக்கிரமசிங்கா தனித்து ஆட்சி அமைக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. சிறிசேனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டும் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. மூன்று ஆண்டுகள் கூட்டாச்சியில் பங்காளியாக இருந்த ஐதேக யோடு சரி, ஐக்கிய எதிர்க்கட்சியோடு சரி வேலை செய்ய மாட்டேன் என சிறிசேனா பகிரங்கமாக அறிவித்தார். இவற்றின் மூலம் அவர் பலமுனைப் போர்க்களங்களைத் திறந்து வைத்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் 2/3 இல் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை. மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 113 உறுப்பினர்களது ஆதரவு தேவை. ஐதேக க்கு 106 உறுப்பினர்களும் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவுக்கு 56 உறுப்பினர்களும் சிறிசேனாவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய முக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 39 உறுப்பினர்களும் இருக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த மற்றக் கட்சிகள் ஆட்சி அமைக்க எத்தனித்தால் அவற்றின் பலம் 95 உறுப்பினர்களைத் தாண்டாது.

பிரதமர் விக்கிரமசிங்காவை பதவியில் இருந்து விலத்கத் தனக்கு அதிகாரம் உண்டா? இல்லையா?என்று சிறிசேனா சட்டமா அதிபரிடம் கேட்டார். அது பற்றி அபிப்பிராயம் சொல்லத் தனக்கு அதிகாரம் இல்லை, உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு சட்டமா அதிபர் யோசனை சொன்னார். இப்போது உச்ச நீதிமன்றத்தை சிறிசேனா அணுகியுள்ளார். இதிலிருந்து இரணில் விக்கிரமசிங்காவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் தனது முடிவை சிறிசேனா கைவிடவில்லை என்பது தெரிகிறது. இதற்குக் காரணம் அரசியல் அதிகாரப் போட்டிதான். சிறிசேனா பவுத்த தேரர்கள்,சிங்கள – பவுத்த தீவிரவாதிகள் மற்றும் இராணுவம் சொல்வதைக் கேட்டு ஆட்சி செய்யப் பார்க்கிறார்.

1978 இல் நிறைவேற்றப்பட்ட யாப்பு பிரதமரை நீக்க சனாதிபதிக்கு அதிகாரம் கொடுத்தது. ஆனால் 19 ஆவது சட்ட திருத்தம் அந்த அதிகாரத்தை நீக்கி விட்டது. பிரதமர் ஒருவர் பதவி விலக வேண்டும் என்றால் (1) அவருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்து அது 2/3 பங்கு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும். (2) பிரதமர் தானாகவே முன்வந்து எழுத்து மூலம் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்தல். (3) பிரதமர் நா.உறுப்பினர் பதவியைத் துறத்தல்.

விக்னேஸ்வரன் எப்படி ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தாரோ அதே போல் சிறிசேனாவும் தன்னைப் பதவியில் அமர்த்திய ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவரையும் அப்புறப்படுத்த நினைக்கிறார். வீட்டுக்குள் சிவனே என்றிருந்த விக்னேஸ்வரனை வெளியில் கொண்டு வந்து தேர்தலில் நிற்க வைத்து முதலமைச்சர் பதவியையும் கொடுத்த தமிழ் அரசுக் கட்சிக்கு இப்போது அவர் சூனியம் வைக்கிறார். சிறிசேனாவை சனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தி அவரது வெற்றிக்கு உழைத்த ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவர் விக்கிரம சிங்காவையும் வீட்டுக்கு அனுப்ப சிறிசேனா கடும் முயற்சி எடுக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் சமூகங்களது ஆதரவு இல்லாவிட்டால் சிறிசேனா சனாதிபதி தேர்தலில் வென்றிருக்க மாட்டார். வென்றிருக்க மாட்டார் என்பது மட்டுமல்ல மகிந்த இராசபக்சா அவரை ஆறடி ஆழக் குழி வெட்டி அவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தையும் சேர்த்துப் புதைத்திருப்பார். இப்படி சிறிசேனா அவர்களே சொல்லியிருக்கிறார். அப்படியான ஆபத்தில் இருந்து காப்பாற்றியதில் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காவுக்கு முக்கிய பங்குண்டு. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக பிரதமர் இரணில் விக்கிரமசிங்காவை பதவி நீக்கம் செய்ய யாப்பில் இடம் உண்டா என சிறிசேனா உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டிருக்கிறார். அதேவேளை தனது ஜென்ம எதிரியான மகிந்த இராசாவுக்கு வெள்ளைகொடி காட்டுகிறார். இந்த சூழ்நிலையிலும் சிறிசேனா மற்றும் விக்கிரமசிங்கா இருவரும் அவ்வப்போது சந்தித்துப் பேசிக் கொண்டார்கள்.

உண்மையில் சிறிசேனாவின் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டாகத் தேர்தலைச் சந்தித்திருந்தால் இருசாராரும் இப்போது அடைந்த படு தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.

நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட 15.7 மில்லியன் வாக்காளர்களில் 65% இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

சனாபதியின் சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,487,960 (13.38%) ஆகும். உறுப்பினர் எண்ணிக்கை 1,036 ஆனால் பிடித்த சபைகள் 10 மட்டுமே. இதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சி க்கு 3,625,510 (32.61%) வாக்குகள் கிடைத்துள்ளன. 42 சபைகளைப் பிடித்துள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,385 உயர்ந்துள்ளது. இந்த இலட்சணத்தில் தேர்தலில் 13.28% வாக்குகளை மட்டும் பெற்ற சிறிசேனா 32.61% வாக்குகளைப் பெற்ற இரணில் விக்கிரமசிங்காவைப் பதவி விலகுமாறு கேட்பது எந்த விதத்தில் நியாயம்?

சிறிசேனா போரை வென்ற வீரர்கள் போர்க் குற்றம் செய்திருந்தாலும் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த மாட்டேன் என்கிறார், வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க மாட்டேன் என்கிறார், இலண்டனில் கழுத்தை வெட்டுவேன் என்று சாடை காட்டிய பிரிக்கேடியர் பிரியங்கா பெர்னாந்துவை வெளியுறவு அமைச்சு பணி இடை நீக்கம் செய்யப்பட்ட போது அந்த நடவடிக்கையை முற்றாக சிறிசேனா தடுத்து நிறுத்தினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் (ஐநாமஉபே) கொண்டு வரப்பட்ட தீர்மானம் எண் 30-1 அனுசரணை கொடுக்க எடுத்த முடிவை சிறிசேனா எதிர்த்தார். அதன் வெளிப்பாடுதான் மங்கள சமரவீராவின் வெளியுறவு அமைச்சர் பதவி பறிப்பு ஆகும். சிறிசேனாவும் சிங்கள – பவுத்த பேரினவாத சிந்தனையில் மூழ்கிய ஒருவர் என்பதை அவரது பேச்சும் நடத்தையும் அதைத்தான் காட்டுகிறது.

அதிதீவிர சிங்கள – பவுத்த இனவாதம் பேசினால் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறலாம் எனச் சிறிசேனா நினைத்திருந்தால் அவரது நோக்கம் நிறைவேறவில்லை. இதனால் சிறிசேனா – இரணில் இருவருக்கும் இடையிலான மோதல் தேர்தல் காலத்தில் மட்டுமல்ல தேர்தல் முடிந்த பின்னரும் தொடர்ந்தது.

தேர்தலில் 15.7 மில்லியன் குடிமக்களில் 65 விழுக்காட்டினர் வாக்களித்தனர். எதிர்பார்த்தது போலவே மகிந்த இராசபக்சா தலைமையிலான சிறிலங்கா பொதுசன பெரமுன (எஸ்எல்பிபி) 45 % வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தது. இரண்டாவது இடத்தை ஐதேக பிடித்தது. மூன்றவது இடத்துக்கு சிறிசேனா தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (எஸ்எல்எவ்பி) மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. தேர்தல் முடிவுகள் பற்றிய புள்ளிவிபரங்களை கீழேயுள்ள அட்டவணை 1 காட்டுகிறது.

சிறிசேனா தலைமையிலான எஸ்எல்எவ்பி சில மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (யூபிஎவ்ஏ) சில மாவட்டங்களிலும் போட்டியிட்டன. இந்தக் கட்சிகள் 2011 ஆம் ஆண்டைவிட 2018 இல் கட்சிகள் அதிக உறுப்பினர்களைத் தெரிவு செய்தது போல் தோன்றினாலும் 2017 இல் நிறைவேற்றப்பட்ட சட்டம் மொத்த உறுப்பினர்களில் எண்ணிக்கையை 4,486 இல் இருந்து 8,356 ஆக உயர்த்தியுள்ளது. மொத்த சபைகள் 335 இல் இருந்து 341 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2018 உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்லோடு ஒப்பிட்டால் ஐதேக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இரண்டுக்கும் வாக்குப் பலம் குறைந்திருப்பதை அவதானிக்கலாம்.

இந்த ஒப்பீடு ஐக்கிய தேசிய முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சி) க்கு நடந்து முடிந்த தேர்தலில் 1,473,403 மில்லியன் வாக்குகள் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. வாக்கு விழுக்காடும் 45.66% இல் இருந்து 32.61%  வீழ்ச்சி கண்டுள்ளது. 2018 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எடுத்த வாக்குகள் 4,732,664 ஆகும். இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  தனித்தனி  பிரிந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்து மூன்று கட்சிகளும் மொத்தமாக 6,456,722  (58.07%) வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வாக்கு வங்கி 176,298  (34.17 %) வாக்குகளால் குறைந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தளவில் மத்திய வங்கி பிணைமுறிவு விற்பனையில் நடந்த ஊழல் அதன் வாக்கு வங்கியைப் பாதித்திருக்கலாம். இந்தக் கட்சி வழமைபோல்  நகர்ப்புறங்களில் மட்டும் ஓரளவு வெற்றியை ஈட்டியுள்ளது. கொழும்பு மாநகர சபையில்  அது அறுதிப் பெரும்பான்மை இருக்கைகளைப் (60) பெற்று ஈட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 113 இருக்கைகள் இல்லாதிருக்கிறது. ஐக்கிய தேசிய முன்னணிக்கு 106 இருக்கைகளும் சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (யூபிஎவ்ஏ) கட்சிக்கு 45 இருக்கைகளும் எஸ்எல்பிபி கட்சிக்கு 50 இருக்கைகளும் இருக்கின்றன.

ஆளும் கட்சிகளான எஸ்எல்எவ்பி (யூபிஎவ்ஏ) மற்றும் ஐதேக இரண்டின் தோல்விக்கு என்ன காரணம் அல்லது காரணங்கள்? இரண்டு காரணங்கள் உண்டு என இந்தக் கட்சிகள் தெரிவிக்கின்றன.  ஒன்று ஏறிச்செல்லும் விலைவாசி உயர்வு.  இரண்டு நெல் உற்பத்திக்கு தேவையான உரம் கிடைக்காதது.  ஆனால் இந்தக் காரணங்கள் மட்டும் தோல்விக்கு வழிகோலியது என்று சொல்ல முடியாது. மகரகம நகரசபை யை மகிந்தாவின் கட்சியான எஸ்எல்பிபி  நேரடியாக வெற்றி கொள்ளாவிட்டாலும் சுயேட்சைக் குழுவை ஆதரிப்பதன் மூலம் கைப்பற்றியிருக்கிறது. இங்கு உரத் தட்டுப்பாடு இருக்கவில்லை.

வடக்கில் 4 தேர்தல் மாவட்டங்களும் (கிளிநொச்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது) கிழக்கில் 3 தேர்தல் மாவட்டங்களும்   காணப்படுகின்றன. வடக்கில் 1 மாநகர சபை,   4 நகர சபைகள் 28 பிரதேச சபைகள் என மொத்தம் 34 சபைகள் இருக்கின்றன.  கிழக்கில் 3 மாநகர சபைகள் 5 நகர சபைகள் 37 பிரதேச சபைகள் என மொத்தம் 45 சபைகள் காணப்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 4 வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி போன்ற தேசியக் கட்சிகள் அவற்றை ஆதரிக்கும் இபிடிபி கட்சி பெற்ற வாக்குகள், விழுக்காடு மற்றும் உறுப்பினர்களின் தொகை தரப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சி 21% வாக்ககளைப் பெற்றுள்ளது. இபிடிபி 19 % வாக்குகளை பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவில் முறையே 47%, 42% வாக்குகளைப் பெற்றுள்ளது. இதே மாவட்டங்களில் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மற்றும் இபிடிபி 5% வாக்களை மட்டும் பெற்றுள்ளன. ஆனால் கிளிநொச்சியில் இபிடிபி இல் இருந்து பிரிந்து போன சந்திரகுமார் 30% வாக்குகளைப் பெற்றுள்ளார். முஸ்லிம்கள் வாழும் மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28% வாக்குகளைப் பெற்றது. கணிசமான சிங்கள வாக்காளர்களைக் கொண்ட வவுனியா மாவட்டத்தில் 26 % வாக்குகளைப் பெற்றது. தேசியக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி கிட்டத்தட்ட 50 % வாக்குகளைப் பெற்றிருந்தன. தீவிர தேசியவாதம் பேசும் கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் அரசியலில் இந்து – கிறித்தவ மதங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர். இது முன்னைய தேர்தல்களில் இல்லாத புதிய திருப்பமாகும்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தல் முடிவுகளை வைத்து தனது வாக்கு வங்கி அதிகரித்து விட்டதாக பரப்புரை செய்கிறது. 2015 இல் நாடாளுமன்றத் தேர்தலோடு இப்போது நடந்து முடிந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட அந்தக் கட்சியின் வாக்குகள் அதிகரித்துள்ளது என்பது உண்மை. அந்தக் கட்சிக்கும் மட்டுமல்ல இபிடிபி, ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுக்கும் வாக்குகள் அதிகரித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உண்டு.

(1) இராணுவம் தனியார் காணிகளை விடுவித்திருந்தாலும் அது 50% க்கு குறைவாகவே காணப்பட்டது. எடுத்துக்காட்டாக சம்பூரில் அரசாங்கம் கையகப்படுத்திய 818 ஏக்கர் காணி முற்றாக பொது மக்களுக்கு மீளக் கையளிக்கப்பட்டாலும் வலிவடக்கில் இராணுவத்தின கட்டுப்பாட்டில் இருந்த 5381.5 ஏக்கர் காணியில் அண்ணளவாக 1900 ஏக்கர் காணியே ( 36.37%) மீள் கையளிக்கப்பட்டது.

(2) யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னமும் ஏதிலி முகாம்களிலே வாழ்கிறார்கள்.

(3) காணாமல் போனோர் தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு ஆணைக்குழுவுக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டாலும் அதன் செயற்பாகள் மந்த கெதியிலேயே நடக்கிறது.

(4) அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 217 இல் (2015) இருந்து 73 ஆகக் குறைக்கப்பட்டாலும் விசாரணைகள் தாமதமாகவே நடைபெறுகின்றது.

(5) இடைக்கால அறிக்கைக்கு எதிரான திட்டமிட்ட பரப்புரை. ஏக்கிய இராஜ்ஜிய என்ற சொல் நாட்டைக் குறிப்பிட்டாலும் இல்லை அது அரசியல் முறைமையைக் குறிக்கிறது என மேடைகளில் சொல்லப்பட்டது.

(6) ஒவ்வொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நா.உறுப்பினர்களுக்கும் கிராம அபவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 2 கோடி பணம் நா.உறுப்பினர்களுக்கு நேரடியாகக் கொடுக்கப்பட்ட இலஞ்சம் எனப் பொய்ப் பரப்புரை செய்யப்பட்டது.

(7) வட மாகாண சபையும் அதன் முதலமைச்சரும் திறமையாகச் செயல்படாமை.

(8) உள்ளூராட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது என்பது முன் கூட்டியே தெரிந்திருந்தும் காலம் தாழ்த்தியே நியமனங்களும் பரப்புரையும் செய்யப்பட்டன.

(9) உள்ளூராட்சி தேர்தல் என்பதால் மக்கள் கட்சி அடிப்படையில் அல்லாது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாக்களித்தார்கள்.

மேலே குறிப்பிட்ட செயல் திட்டம் எதுவும் முழுமையாகச் செயற்படுத்தப்படவில்லை. 19 ஆவது சட்ட திருத்தம் சனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்துள்ளதே தவிர அது முற்றாக ஒழிக்கப்படவில்லை. குடும்ப ஆட்சி இப்போது இல்லாவிட்டாலும் ஊழல் ஒழிக்கப்படவில்லை. சண்டே லீடர் லசந்த விக்கிரமதுங்காவின் கொலை, முன்னாள் நா.உறுப்பினர் யோசேப் பரராசசிங்கம் கொலை, திருகோணமலையில் 5 தமிழ் இளைஞர்கள் கொலை, றக்பி வீரர் வசிம் தாயுடீன் கொலை, பிரகீத் எக்னேலிகொட காணாமல் போனது பற்றிய விசாரணைகள் மூன்று ஆண்டுகள் கழிந்தும் கொலையுண்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. மத்திய வங்கி பிணைமுறிவுகள் விற்றதில் அரசுக்கு ருபா 11 பில்லியன் இழப்பு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தலில் விட்ட பிழைகளை, செய்த தவறுகளைக் கண்டறிந்து அவற்றைப் போக்கத் தக்க நடவடிக்கைகளை தமிழ் அரசுக் கட்சி எடுக்க வேண்டும். மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டுக் கடைசியில் அல்லது அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் நடக்கும் சாத்தியம் இருக்கிறது. அதற்கான ஆயத்தங்கள் இப்போது தொடங்கியே முடுக்கி விடப்பட வேண்டும்.

இதனை முடிக்கும் போது மத்தியில் நல்லாட்சி அரசு தொடரும் என்ற நல்ல செய்தி வந்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நல்லாட்சி அரசு 2015 இல் மக்களிடம் கேட்டுப் பெற்ற ஆணையை முழுதாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(1) நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறையை ஒழித்தல்.

(2) குடும்ப ஆட்சியையும் ஊழல் ஆட்சியையும் ஒழித்தல். தவறு இழைத்தவர்களைத் தண்டித்தல்.

(3) புரையோப் போய்க் கிடக்கும் இனச் சிக்லைப் புதிய அரசியல் யாப்பு மூலம் தீர்த்து வைத்தல்.

(4) அமைச்சரவை 30 அமைச்சர்களைக் கொண்டிருக்கும் எனச் சொல்லப்பட்டாலும் தற்சமயம் ஒரு முதமைச்சர், 47 அமைச்சர்கள், 23 துணை அமைச்சர்கள், 23 இராசாங்க அமைச்சர்கள் என மொத்தம் 93 பேர் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அமைச்சர்களின் தொகை குறைக்கப்பட வேண்டும். அமைச்சர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதும் ஒருவித ஊழல்தான். மொத்தம் 1.2 பில்லியன் குடிமக்கள் கொண்ட அண்டை நாடான இந்திய நாட்டின் அமைச்சரவையில் 1 பிரதமர் 28 அமைச்சர்கள், 39 இராசாங்க அமைச்சர்கள் ஆக மொத்தம் 66 அமைச்சர்களே இருக்கிறார்கள்.

(5) நா.உறுப்பினர்களுக்கு வரியில்லாத வாகனங்கள் இறக்குமதி செய்தததில் ரூபா 40 பில்லியன் (ஒரு பில்லியன் 100 கோடி) வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதை எழுதி முடிக்கும் போது நல்லாட்சி அரசுக்கு ஆயுள் கெட்டி என்ற நல்ல செய்தி வந்திருக்கிறது. பழைய தவறுகள் திருத்தப்பட வேண்டும். கிடைத்த வாய்ப்பை செம்மையாகப் பயன்படுத்த வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்