இருகிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய காதல்ஜோடி

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கீழ்அச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கார்த்திக் (வயது 22). ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். பக்கத்து ஊரான மேல் அச்சமங்கலத்தை சேர்ந்த ராமன் மகள் பாரதி (23), திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

பக்கத்து ஊரை சேர்ந்த 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் காதல் அரும்பியது. கடந்த 5ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி 2 பேரும் காதலித்து வந்தனர்.

இதனையடுத்து பாரதியின் பெற்றோர் மகளை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுப்பது என முடிவு செய்தனர். அதன்படி, பாரதிக்கு மாப்பிள்ளை பார்த்து, வருகிற 26-ந்தேதி திருமணத்துக்கான நாளும் குறிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இதுபற்றி பாரதி காதலன் கார்த்திக்கிடம் தெரிவித்தார். இதனால் இருவரும் மனமுடைந்து காணப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பாரதி வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது உறவினர்கள் பாரதியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இதையறிந்த பாரதியின் காதலர் கார்த்திக் கதறி அழுதார். அவரும் வி‌ஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல்ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இருகிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்