“பெண்களே நாட்டின் கண்கள் அவர்களின் பிரதிநிதித்துவமே இன்றைய தேவையும் கூட”

ஆக்கம் : நந்தலாலா 
உலகின் பிரம்மிக்க வைக்கும் சனத்தொகையான 720 கோடி மக்களையும் ஈன்றெடுத்தவர்கள் பெண்களே யாவர்.
இவ்வளவு மக்களையும் பாலூட்டிச் சீராட்டி ஊர் போற்ற வைத்தவர்களும் பெண்களேயாவர்.
வேளாவேளைக்கு நேரம் தவறாது உணவாக்கி சுடச்சுட அமுதூட்டி மலையாக வளர்ப்பவர்களும் பெண்களேயாவர். உண்ணாமல் உறங்காமல் கணவனையும் பிள்ளைகளையும் பாவோடு பழம்
சேர்த்துப் பக்குவமாகத் தூங்க வைப்பவளும் பெண்களேயாவர்.
இதைவிட மேலதிகமாகக் கணவனின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்து இன்பம் பாப்பவளும் பெண்களேயாவர்.
இதைவிட நோய் நொடி துன்பம் ஏதும் வந்து விட்டால், பாய் விரித்து அருகிலே கைதந்து எம்மைக் காப்பவளும் பெண்களேயாவர்.
மேலும் ஒரு நாளை விடிய வைக்கும் காலைத் தேநீரை சுடச்சுட ஊற்றி இருப்பிடத்திற்கு கொண்டு வந்து கையிலே தந்து பருகச் செய்து, சீனி போதுமா சாயம் போதுமா இன்னும் வேண்டுமா எனக் குடிக்கவும் செய்து குடித்த பின்னர் பேணிகளை கழுவியும் உரிய இடத்த்தில் வைக்கின்ற பணிகளைப் பெண்களின் நொந்து போன கரங்களே நாளுங்களைக்காமல் செய்கின்றன.
ஒரு பிள்ளைக்குத் தோசையாம், ஒரு பிள்ளைக்கு இட்லியாம், ஒரு பிள்ளைக்கு நூடில்ஸ்ஸாம், கணவனுக்கு ஆட்டாமத் தோசையாம், தாத்தாவுக்கு பாணாம், பாட்டிக்கு அப்பமாம் இவ்வளவும் செய்யும் அம்மாவுக்கு மிச்சமாம் காரணம் அவள் ஒரு தாயாக அவதாரம் எடுத்தி.ருப்பதனாலன்றோ!
அடேயப்பா! ஒரு நாளைக்கு குவிந்து கிடக்கும் உடுப்புக்களின் வியர்வையும், அழுக்குகளையும், துவைத்து அடித்து அலம்பி எடுத்து பிழிந்து காயவிட்டு ஒவ்வொன்றாக மடித்து இஸ்திரிக்கை செய்தும், அழகு பார்ப்பவளும் பெண்கள் தானே!
முடிந்ததா வேலை! வீடு கூட்டி, முற்றம் கூட்டி, ஒட்டறை தட்டி, சாமியறை துப்பரவாக்கி, குப்பை எரித்து, தண்ணீர் தெளித்து தூபம் போட்டு, கோலம் இட்டு, அடுப்பு மூட்டி, காலை வேள்வி செய்பவளும் பெண் தானே.
காலைவேள்வி, மதிய வேள்வி, இராத்திரி வேள்வி, இல்லறவேள்வி எனத் தன்னையே முழுமையாகத் தந்துவிட்டு தான் ஒடுங்கிப்போகும் ஒரு அப்பாவிப் பிராணியாகி அடங்கிப் போகிறாள் பெண்.
இன்னும் எத்தனை? மகளாய், கன்னியாய், குமரியாய் தாயாய் தாரமாய், தெய்வமாய் தேவராய் தியாகியாய் பராக்கிரமியாய் பூமாதேவியாய் பேறாவதும் பெண்கள் தானே.
அதியுச்சமான பிரசவ வேதனையை எந்தப் பல்கலைக் கழகத்தாலும் எழுதவும் இயலாது. எந்த ஆண்களாலும் புரிந்து கொள்ளவும் முடியாத அந்த வலியை அவளால் மட்டுமே அனுபவிக்க முடிகிறது.
அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும், ஆணுக்கு அந்த வலி எள்ளளவும் சென்று வலிப்பதில்லை. அடுத்தது எப்போது என்று ஆயத்தமாகக் கொண்டிருப்பார்கள் வருசத்திற்கு ஒன்று என்ற விதத்தில் ஆண்கள் சவாரி செய்வதும்
பெண்களிலே. ஒரு சில ஆண்கள் திருமணம் செய்யாமல் தந்தையாகி இருப்பார்கள். வாய் இருந்தால் எதைத்தான் செய்யமுடியாது.
பெரியவர்கள் செய்தால் தர்ம காரியம். ஏனையவர்கள் செய்தால் கடூழியச் சிறைத்தண்டணை. இந்தியாவில் இது சகஜம். இலங்கையில் அதுவும் மக்களுக்கு இதை விளங்கப்படுத்தவே தேவையில்லை. காரணம் பெண்களின் சாபம் விரும்பியோ விரும்பாமலோ கிடைத்தே தீரும்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளைத் தற்காலப்பெண்கள் கொண்டிருப்பதனால், பட்டங்களையும் சட்டங்களையும் பாரினில் பெண்கள் தமதாக்குவார்கள்.
உலகம் காலம் தாழ்த்தியாவது பெண்களே நாட்டின் கண்கள் என விண் வெளியிலிருந்து ஒப்புக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானியாக, மெஞ்ஞானியாக, டாக்டராக பொறியியலாளராக, பேராசிரியராக, அதிபராக, ஆசிரியையாக, நிர்வாகியாக, நீதிபதியாக, பிரதமராக, ஜனாதிபதியாக நடிகையாக, பாடகராக, பேச்சாளராக, விவசாயியாக, விளையாட்டு வீராங்கனையாக, புலவராக, பண்டிதராக, பாராளுமன்ற உறுப்பினராகப் பெண்கள் தினந்தினம் உருவாகிவரும் போது, ஆன்மீகத்திலும் அரசியலிலும் சரிக்குச் சரியாக ஐம்பதுக்கு ஐம்பது வீதப் பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் அமையுமாயின் எந்தவொரு நாடும் தோற்காது வென்றே தீரும் எங்கும் சகோதர சகவாழ்வு பிரவாகிக்கும், இனிவரும் தேர்தல்களில் கூடுதலான பெண்கள்’ களமிறங்க எம்மை நாம் விட்டுக் கொடுக்க ஆவணபுரிவோமாக……

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்