அக்கரைப்பற்று பிரதேசத்தில் பதற்ற நிலை – பொலிசாரின் தலையீட்டை அடுத்து சுமூக நிலை

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலை பொலிசாரின் தலையீட்டை அடுத்து கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.

திகன சம்பவத்தை கண்டித்து அக்கரைப்பற்று முஸ்லிம் பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைவாக வியாபார நிலையங்கள் மற்றும் அரசநிறுவனங்கள் வங்கிகள் யாவும் செயலிழந்த நிலையில் வாகனப்போக்குவரத்தும் முற்றாக தடைசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொழிலின் நிமித்தம் அக்கரைப்பற்று சந்தைப்பகுதிக்கு சென்ற தமிழ் இளைஞன் ஓருவர் ஹர்த்தால் காரணமாக வேலைக்கு சமூகமளிக்கமுடியாது என்பதை தனது அலுவலகத்திற்கு நீருபிக்க புகைப்படம் ஒன்றினை எடுத்துள்ளான்.

இதனை கண்ட சகோதர முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அவ்விளைஞனை தாக்கியுள்ளதை அடுத்தே இரு சமூகங்களுக்கிடையே பதற்ற நிலை உருவானது.

ஆயினும் பொலிசாரின் தலையீட்டை அடுத்து பள்ளிவாசல் நிருவாகிகள் உள்ளிட்ட குழுவினர் இணைந்து குறித்த இளைஞனிடம் மன்னிப்பு கோரியதை அடுத்து சுமூக நிலை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நிலைமையினை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் பொருட்டு விசேட அதிரடிப்படையினர் பொலிசார் என பலர் அக்கரைப்பற்று பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை ஹர்த்தால் இடம்பெறாத ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள அரச வங்கியும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதை காணமுடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்