கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள்

நேற்றும் நேற்றுமுன்தினமும் கண்டிப் பகுதியில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் இந்த நாடு கொடிய இனவாத சேற்றுக்குள் புதைக்கப்பட்டு நிம்மதியற்ற சமாதானம் சீர்குலைக்கப்பட்ட அச்சம் சூழ்ந்த ஒரு சூழலுக்குள் எமது மக்களை தள்ளிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சாரதி சில இளைஞர்களால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவமானது  தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை உருவாக்கியது. இது ஒரு சட்டபூர்வமாக தண்டனைக்குரிய குற்றவியல் குற்றமாகும். இது சம்பந்தமாக இத் தாக்குதலை நடத்திய சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இப்படியான விரும்பத்தாகாத முறை மீறல்கள் நடப்பது என்பது இடம்பெறும் சம்பவங்கள்தான். தனிப்பட்ட நபர்களுக்கிடையே மோதல்கள் ஏன் கொலைகள் தொடர்பாகக்கூட நடவடிக்கை எடுப்பதற்காகவே பொலிஸ் திணைக்களம், நீதிமன்றம், சிறைச்சாலை என்பன உள்ளன. ஆனால், இப்படியான சம்பவங்களுக்கு இனவாதம் பூசப்பட்டு, தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான பிரச்சினைகளை இனங்களுக்கு இடையேயான மோதல்களாக மாற்றி வன்முறைகளில் ஒரு பிரதேசத்தையே தள்ளுவது எவ்விதத்திலும் அனுமதிக்கப்படக்கூடியதல்ல. இது நாட்டின் ஒட்டுமொத்த அமைதியையும் குலைக்கும்ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்றே நாம் கருதுகிறோம். கண்டிப் பகுதியின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாகவே ஒற்றுமையாகவும் ஒருவரையொருவர் நல்லுறவைப் பேணியும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கண்டி மாவட்டத்தையே கலங்க வைக்கும் இன  மோதல்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன என்றால் அதற்குப் பின்னால் இனவாதத்தில் அரூபக் கரங்கள் வலிமையுடன் செயற்பட்டுள்ளன என்பதை எம்மால் தெளிவாகவே புரிந்துகொள்ளமுடியும்.

tamilcnn.lk

எனவே இப் பிரச்சினை பற்றியும் இதன் இது உற்பத்தியான உண்மையான மூலம் தொடர்பிலும் இது பெருப்பிக்கப்பட்டு மோசமான வன்முறையாக மாற்றப்பட்டமையின் பின்னாலுள்ள சக்திகள் பற்றியும் நாம் தெளிவான ஒரு புரிதலுக்கு வரவேண்டியவர்களாகவுள்ளோம். சாதாரணமாக வன்முறைகளில் முன்னின்று செயற்படும் ஏவல் பிசாசுகளை கைது செய்வதும் தண்னை அளிப்பதும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையப்போவதில்லை.
பிரச்சினையில் மூலவேர் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்ந்துதெடுக்கப்பட்டு அழிக்ப்படாவிட்டால், இத்தகைய துர்ப்பாக்கிய நிலைமைகள் மீண்டும்
மீண்டும் முளைவிடும் என்பதில் எவ்வித சந்திகத்துக்கும் இடமில்லை. அதை சட்டத்தின்மூலமோ நீதிமன்றத்தின்மூலமோ நிறைவேற்றிவிடமுடியாது. அடிப்படையில் இவற்றுக்குப் பின்னால் நின்று செயற்படும் அரசியல் ஆதாயத்துக்காக இனவாதத் தீயை மூட்டிவிடும் தீயசக்திகள்
இனங்காணப்படவேண்டும். அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பதுடன், அவர்களை மக்கள் மத்தியில்
அம்பலப்படுத்தும் முயற்சிகளும் வேகமாக எடுக்கப்படவேண்டும். கடந்த அரசாங்க காலத்தில் தம்புள்ளையில் தொடங்கி பேருவளை அளுத்கம
வரை பள்ளிவாசல் தாக்கப்படுவதும் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் வீதியில் தூக்கி வீசப்படுவதும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள்,
குடியிருப்புக்கள் தாக்கி அழிக்கப்படுவதும் தொடர்ந்து இடம்பெற்றுவந்தன. இப்படியான முறைமீறல்கள் தொடர்பாக காத்திரமான எந்த நடவடிக்கைகளும்
எடுக்கப்படவில்லை. இவற்றின் உச்சகட்டமாக பேருவளை ஆளுக்கமவில் உயிரிழப்புக்கள் உட்பட்ட பேரழிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின்
பின்னால் பொதுபல சேன என்ற இனவாத அமைப்பு நின்று செயற்பட்டு வன்முறைகளை அரங்கேற்றியது என்பது தெரிந்திருந்தும் அவ்வமைப்பின்
முக்கியஸ்தர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கொதிப்பும் குமுறல்களும் மதிக்கப்படாமலே
புறமொதுக்கப்பட்டன. பொதுபல சேனாவின் பின்னணியில் கடந்த அரசாங்கத்தின் சில வலிமைவாய்ந்த நபர்கள் இருந்துள்ளனர் என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்பு ஒரு நல்ல சூழ்நிலை உருவாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையிலேயே முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வரவும் பேராதரவு வழங்கினர். ஆனால், சில காலம் இனவாத வன்முறைகள் இடம்பெறாதபோதிலும் அண்மைக் காலங்களில் அவை முளைவிட ஆரம்பித்துள்ளன. காலி ஹிந்தோட்டையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோதிலும் அது ஆபத்தான கட்டத்தை எட்டாத அளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், அம்பாறையில் திட்டமிட்டவகையில் முஸ்லிம் உணவகங்களில் கர்ப்பத் தடை மருந்து உணவுகளில் சேர்க்கப்படுகிறது என்ற பொய் பரப்புரை மூலம் இதன் காரணமாக பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் பள்ளிவாசலும் சேதமாக்கப்பட்டது. பள்ளவாசல் மதில் உடைக்கப்பட்டதுடன் அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக கைது செய்யப்பட்ட ஒரு சிலரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி இரவு 10-30க்கு தொடங்கப்பட்ட கலவரங்கள் அதிகாலை ஒருமணி வரையிலும் தொடர்ந்தபோதிலும் அவ்விடத்துக்கு பொலிஸார் வரவில்லை. இப்படியான அலட்சியமான நடவடிக்கைகள் இனவாத சக்திகளுக்கு அச்சமின்றி வன்முறைகளை தொடரும் துணிச்சலை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே அம்பாறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமையாலேயே கண்டி வன்முறைகள் பிரமாண்டமான அளவில் வெடிக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கியதென்பதை நாம் நம்புகிறோம்.  அதுமட்டுமின்றி இனவாத சக்திகளுக்கு எதிராக ஜனாதிபதியும்சரி பிரதமரும்சரி இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகிறார்கள்  என்பதை எம்மால் புரிந்துகொள்ளமுடியவில்லை.  இலங்கையின் இன்றைய சிங்கள அரசியலில் இனவாதம் என்பது சில தரப்பினரால் வலிமைமிக்க அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதை முஸ்லிம் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்

பேசும் மக்கள் என்ற முறையிலும் இலங்கையின் சிறுபான்மை இனங்கள் என்ற முறையிலும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். என்பதில் அவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். இது சிங்கள இனவாத சக்திகள் சிறுபான்மை இனங்களுக்கு
எதிராக மேற்கொண்டுவரும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க தவிர்க்கமுடியாதொரு தேவையாகவுள்ளது. வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது
முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து பலமான சக்தியாக உருவாக்கிவிடும் என்ற காரணத்தால் இனவாத சக்திகள் அதை கடுமையாக எதிர்த்தன. அதேவேளையில் வடக்கு-கிழக்கு இணைப்பை எதிர்க்கும் முஸ்லிம் தலைமைகள் சிங்கள இனவாதிகளின் அபிலாசைகளுக்கு செயற்படுகின்றன என்பதை அவர்கள் புரிந்துகொண்டு அந்த மாயையில் இருந்து விடுபடவேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நாம் இனவாத சக்திகளை  திருப்திப்படுத்துவதன்மூலம் எமக்கான உரிமைகளை பெறமுடியும் என நினைப்பது எவ்வளவு மூட்டாள் தனம் என்பதை அண்மையில் இடம்பெற்ற
ஹிந்துல, அம்பாறை, கண்டி போன்ற இடங்களில் இடம்பெற்ற வன்முறைகள் உணர்த்திநிற்கின்றன.

எனவே அம்பாறை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டுமென்பதையும் அவர்களின் பின்னால் நின்று அவர்களை இயக்கிய இனவாத சக்திகள் மக்கள் முன் அம்பலப்படுத்தப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டுமென்பதையும் நான் இந்த உயரிய சபையில் வலியுறுத்த விரும்புகிறேன். அதேவேளையில்
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்து தமிழ் மக்களும் தமிழ்மக்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்து முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற முறையிலும் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனம் என்ற வகையிலும் குரல்கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவுசெய்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்