பெண்கள் இரண்டாம் நிலையினராக ஆக்கப்பட்டிருப்பது மனித சமூகத்தின் சாபக்கேடாகும்.!

உலகின் சனத்தொகையில் சரிபாதிக்கு மேலான பங்கினராக இருக்கும் பெண்கள் இரண்டாம் நிலையினராக ஆக்கப்பட்டிருப்பது மனித சமூகத்தின் சாபக்கேடாகும். எப்பொழுது பெண்கள் சரிநிகர் சமமான இருக்கும் நிலை ஏற்படுகிறதோ  அப்பொழுது தான் மனித சமூகத்திற்கு முழுமையான விடுதலை கிடைக்கும். இவ்வாறு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்ட செயலாளர் சு.டோன்பொஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் கூடிய நேரம்  வேலைசெய்பவர்களாக பெண்களே விளங்குகின்றனர். அலுவலக வேலை மற்றும் ஊதியம் பெறும் உழைப்புகளுடன் சம்பளம் பெறாத வீட்டுவேலையிலும் ஈடுபட்டு நாளாந்தம் 18 மணித்தியாலங்கள் வரை உழைப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் உடல் உள சமூக நெருங்குவாரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பெண்ணே வீட்டின் நிர்வாகியாக இருப்பதால் குடும்பத்தின் முழுச் சுமையும் அவள் மீதிலே பொறுப்பிக்கப்படுகின்றது. யுத்தத்தினாலும் ஏனைய நிகழ்வுகளினாலும் கணவனை இழந்த பெண்களுக்கு மேலும் சுமைகள் ஏற்படுகின்றன.
நெருக்கடியான நிலையில் இருக்கும் பெண்கள் நுண்கடன் என்னும் பொறியில் வீழ்த்தப்படுகின்றனர். நாட்டில் பெருகியுள்ள நுகர்வுக் கலாசாரம் பெண்களை மிகவும் பாதிக்கின்றது. இந்தக் கலாசாரம் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் நுகர்வுப் பண்டங்களாக மாற்றியுள்ளது. ஆளாக மதிப்புப் பெற்று சுதந்திர உரிமையுள்ளவளாக வாழ வேண்டிய பெண்கள் உரிமையிழந்து வாங்கவும் விற்கவும் உரிய பொருட்கள் போல ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அச்சம் நாணம் போன்ற கலாசார கோலங்களால் அச்சமூட்டப்பட்டிருக்கும் பெண்கள் மீது சுரண்டலும் குடும்ப வன்முறையும், பாலியல் வன்முறையும் அதிகரித்து வருகின்றன.
மது, போதை பொருட்பாவனையின் அதிகரிப்பு, மதிமயங்குவதே நாகரிகம் எனும் நவீன பழக்கங்களும் பெண்கள் மீதான கூட்டுப் பாலியல் வன்முறையும் அதன் மூலமான கொலைச் சம்பவங்களும் வாராந்தம் அரங்கேறிவருகின்றமை நாகரிக சமூகத்தை தலைகுனிய வைக்கின்றது.
அரசியல் தலைமையில் பெண்கள் பங்கு மிகக் குறைந்த அளவிலே உள்ளது. அரசியலில் ஈடுபடும் பெண்களும் அதிகாரங்களால் அடக்கப்படுவதையும் அங்கீகார மறுப்பையும் அண்மைய தேர்தல் அரசியலில் காணக் கூடியதாக இருந்தமை இருக்கின்ற சட்டங்களையே அமுல்படுத்த போராடவேண்டிய நிலமையை ஏற்படுத்தி உள்ளது.
திறந்த பொருளாதாரத்தின் நுகர்வுக் கலாசாரத்தை ஒழித்து தேசிய பொருளாதாரத்தையும் உயர்ந்த தேசிய கலாசாரத்தையும் ஏற்படுத்தினால் மாத்திரமே பெண்கள் சமத்துவ உரிமை பெற்று அச்சமின்றி வாழ வழி பிறக்கும். பெண்களும், பெண் விடுதலையை விரும்பும் அனைவரும் இணைந்து இதற்காக போராட இத்தினத்திலே உறுதி எடுக்க வேண்டும் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்