சைக்கிளில் பால் சேகரித்தவர்: இன்று ரூ.300 கோடிகளுக்கு அதிபதி!

சைக்கிளில் வீடு வீடாக சென்று பால் சேகரித்தவர், இன்று ரூ.300 கோடிகளுக்கு அதிபதி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இதோ உண்மை சம்பவம்,

மேற்கு வங்கத்தில் உள்ள புலியா எனும் கிராமத்தில் பிறந்தவர் நாராயண், இவருக்கு இரு சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகள். இவரது தந்தை பிமலேந்து மஜும்தார். இவர் ஒரு விவசாயி. அம்மா பெயர் பசந்தி மஜும்தார்.

நாராயண் அப்பாவிற்கு ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. அதனால் மாதம் ரூ.100-க்கு மேல் அவரால் சம்பாதிக்க முடியாத காரணத்தால் நிதி நெருக்கடியில் அக்குடும்பம் இருந்தது.

இவர் 1974-ல் தன் கிராமத்தில் இருந்த அரசுப்பள்ளியில் வங்கமொழி வழியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, ராணாகாட் கல்லூரியில் வேதியியல் படிக்கச் சேர்ந்தார்.

ஆனால் அவருக்கு வேதியியல் படிப்பில் ஓராண்டிலே ஆர்வம் போய் விட்டதால், விரைவாக சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கால்நடைத்துறை அதிகாரி ஒருவர், பால் பண்ணைத் தொழிலில் படிப்பை முடித்தால் விரைவாக வேலை கிடைக்கும் என்று சொன்னார்.

எனவே நாரயண் தனது படிப்பை இடையில் மாற்றி, கர்னாலில் உள்ள தேசிய பால் நிறுவனத்தில் பால் தொழிலில் பி டெக் படிக்கச் சேர்ந்தார்.

செலவுக்குப் பணம் இல்லாததால், தினமும் காலை 5- 7 வரை ஒரு பால் விற்பனையகத்தில் விற்பனையாளராக வேலை பார்த்தார்.

அந்த பால் விற்பனையில் அவருக்கு தினம் 3 ரூபாய் கிடைத்தது, அது போதவில்லை என்பதால் நாராயணின் அப்பா நிலத்தின் ஒரு பகுதியை விற்று கல்விக்கட்டணத்தை செலுத்தினார்.

படிப்பை முடித்த பின் ஒரு ஐஸ்கிரீம் நிறுவனம், கூட்டுறவு பால் பண்ணையில் மேற்பார்வையாளர் போன்ற பல இடங்களில் வேலை பார்த்தார்.

ஓராண்டுக்கு மேல் அங்கு பணி புரிந்தார். 1980-ல் அதை விட்டு விலகி கொல்கத்தாவில் வேறொரு பால் நிறுவனத்தில் ரூ.1300 சம்பளத்திற்கு சேர்ந்து அங்கு 5 ஆண்டுகள் வேலை பார்த்து ரூ.2,800 சம்பளம் வாங்கிய போது அதையும் விலகி விட்டார்.

1982-ல் அவர் ககாலி மஜும்தாரை எனும் பெண்ணை மணம் புரிந்தார், இரு ஆண்டுகள் கழித்து நந்தன் மஜும்தான் என்ற மகன் பிறந்தார்.

அதன் பின் நாராயண் 1985-ல் அரபு நாட்டில் டென்மார்க் நாட்டு பால் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்றார். அங்கு ரூ.18,000 சம்பளம். ஆனால் குடும்ப விசா கிடைக்காததால் அங்கிருந்து, திரும்பி வந்து விட்டார்.

மீண்டும் பழைய வேலைக்கு சென்று அங்கே 10 ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்தார். 1995-ல் அவருக்கு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணி உயர்வு பெற்றார்.

அதே ஆண்டு இன்னொரு பால் நிறுவனத்தில் பொதுமேலாளராக மாதம் ரூ.50,000 சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.

அந்நிறுவனம் பால், பால் பொருட்கள் தயாரிப்பில் இயங்கியது. அங்கே 10 ஆண்டுகள் வரை வேலை பார்த்தார்.

அங்கு பணிபுரிந்த போது தான் நாராயணுக்கு பல திருப்பங்கள் ஏற்பட்டது. அந்நிறுவனத்தின் உரிமையாளர் சொந்தமாக நிறுவனம் தொடங்க நாராயணை ஊக்குவித்தார்.

அவரது ஊக்குவிப்பால் நாராயண் விவசாயிகளிடம் பால் பெற்று பணிபுரிந்த நிறுவனத்திற்கே அளிக்கத் தொடங்கினார்.

1997-ல் நாராயண் தன் 40 வயதில் தொழிலதிபர் ஆனார். வீடு வீடாக சைக்கிளில் சென்று பால் சேகரித்தார். முதல் நாளில் 320 லிட்டர் பால் சேர்த்தார்.

அதன் பின் ரெட் கவ் மில்க் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதில் முதல் ஆண்டு லாபம் இல்லை. பின் 1999-ல் அவர் தன் முதல் பால் குளிரூட்டும் நிலையத்தை ஹுக்ளி மாவட்டத்தில் ஆராம்பாக் என்ற இடத்தில் தொடங்கினார்.

அதற்கு மாத வாடகை ரூ.10,000. அப்போது அவர் இன்னும் வேலை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.

சில ஆண்களுக்கு பின் அவரது பால் சேகரம் தினமும் 30,000 -35000 லிட்டர்கள் ஆனது. ஆண்டு வருவாய் 4 கோடி. அதே ஆண்டு அவர் நிறுவனத்தை தன் மனைவியுடன் சமபங்கு நிறுவனமாக மாற்றினார்.

2003-ல் அவரின் நிறுவனத்தை பிரைவேட் லிமிடட்டாக மாற்றினார். அவரும் அவரது மனைவியும் இயக்குநர்களாக இருந்தார்கள்.

அதே ஆண்டு 25 லட்சம் செலவில் ஹௌரா மாவட்டத்தில் நிலம் வாங்கி உதய நாராயண்பூரில் குளிரூட்டும் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தைத் தொடங்கினார்.

ஜார்க்கண்ட், அஸ்ஸாமில் பால் விநியோகம் தொடங்கினார். 2004-ல் அவரின் வருவாய் 6.65 கோடியாக உயர்ந்தது. அவரின் கம்பெனியில் 20 பணியாளர்கள் இருந்தனர்.

இதன்பிறகு வளர்ச்சி சிறப்பாக இருந்தது. ஆண்டுக்கு 30 சதவீத வேகத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் இருந்தது.

2008-ல் அவரது பால் சேகரிப்பு தினமும் 70,000- 80,000 லிட்டர்களாக உயர்ந்தது. தயிர், நெய், பன்னீர், ரசகுல்லா தவிர ஐந்து வகையிலான பால் பொருட்களை ரெட் கவ் விற்பனை செய்தது.

டிசம்பர் 2009-ல் எம்பிஏ முடித்த நாரயணின் மகன் நந்தன், அந்த கம்பெனியில் இயக்குநராகச் சேர்ந்து, நவீன அணுகுமுறையைக் கொண்டு வந்தார்.

அதனால் தங்களின் விற்பனை 74 கோடியாக உயர்ந்தது. மேலும் பால் கிரீம், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றையும் தயாரிக்க உள்ளோம்.

அதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 400 கோடி வருவாய் இலக்கை நிர்ணயித்து இருப்பதாக நாராயண் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்