காடையர்க்குத் தெரியாது

பற்ற வைக்கின்ற
பைத்தியகாரனுக்கும் தெரியாது.
எரிகின்ற கடையுடன்
எத்தனை மனிதர்களின்
எதிர்காலமும் எதிர்பார்ப்பும்
எரிகின்றது என்பது.

கல்லை எறிகின்ற
காவாலிக்குத் தெரியாது.
கண்ணாடியுடன் சேர்த்து
தன்னாட்டின் பெயரும்
உடைந்து போய்
உலகளவில் நொறுங்குவது.

பள்ளியை உடைக்கும்
மொள்ளமாரிக்குத் தெரியாது.
அள்ளாஹ்வின் வீட்டில்
அத்து மீறி நுழைந்து
அட்டகாசம் செய்தவன்
பட்டழிந்து போன செய்தி.

வீடுடைத்து எரிக்கும்
காடையனுக்குத் தெரியாது.
பிறந்து வளர்ந்து
பறந்து வாழ்ந்த வீடு
உடைந்து போகும் போது
உள்ளே எழும் வலி
உடைக்கின்ற காடையனை
ஒரு நாள் வதைக்கும்.

ஐம்பதாயிரம் தருவதாக
அறிவித்தல் கொடுக்கும்
அரசுக்குப் புரியாது.
தருகின்ற பணம்
கருகிய இடத்தின்
கறுப்பைப் போக்கவும்
காணாது என்று.

பாட்டுக் கேட்க கோல் எடுக்கும்
பாத்திமாக்களுக்குத் தெரியாது.
வெடில் எழும்பும் வேளை
பிடில் வாசிப்பததைப் பார்த்து
ஊடக ‘சக்தி’கள்
உள்ளுக்குள் சிரிப்பதை.

கண்டபடி அடிக்கலாம் என
கணக்குப் போடுகின்ற
காடையர்க்குத் தெரியாது.
இந்த இனம்
எழுந்து நின்றால்
சுவர்க்கம் அடையும் வரை
எவர்க்கும் அஞ்சாது என்பது….!

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்