வவுனியா புகையிரத நிலைய வீதியில் போக்குவரத்து பொலிசார் மீது தாக்குதல்

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் வைத்து போக்குவரத்து பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரப் பகுதியில் இருந்து வைரவபுளியங்குளம் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது குறித்த மோட்டர் சைக்கிள் நிறுத்தாது சென்ற போது அதனை விரட்டி சென்ற போக்குவரத்து பொலிசார் வவுனியா, புகையிரத வீதியில் உள்ள பூங்கா வீதிச் சந்தியில் குறித்த மோட்டர் சைக்கிளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன்போது மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். பொலிசாரும் அதனை தடுத்து அவரை கைது செய்ய கடும் பிரயத்தனம் செய்தனர்.
சுமார் 10 நிமிடங்களாக அப்பகுதியில் போக்குவரத்து பொலிசாரும் குறித்த இளைஞரும் கைகலப்பில் ஈடுபட்டு முரண்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு மேலதிக போக்குவரத்து பொலிசார் வருகை தந்து குறித்த இளைஞரை கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதேவேளை, இச்சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் வேறு மூன்று மோட்டர் சைக்கிளில் பயணித்த ஆறு இளைஞர்கள் வவுனியா மணிக்கூட்டு கோப்புர சந்தியில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் வீதி சோதனை செய்ய நிறுத்திய போது நிறுத்தாது அந்த பொலிசாரை சீண்டும் வகையில் தமது மோட்டர் சைக்கிளில் பல தடவை சந்திக்கு அண்மையில் வருவதும் திரும்பி தப்பி ஒடுவதும் போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக அறிய முடிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்