T20 முத்தரப்பு தொடரில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட சவால்

சுதந்திர கிண்ண T20 முத்தரப்பு தொடரின் தீர்க்கமான போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதனால் தொடரில் ஒரு வெற்றி இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளோடு இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற கடுமையாக போராட வேண்டி ஏற்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு பங்களாதேஷுடன் இன்னும் ஒரு போட்டி மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற அந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

tamilcnn.lk

எனினும் நிகர ஓட்ட வீத அடிப்படையில் இலங்கை அணி பங்களாதேஷை விடவும் முன்னிலையில் இருப்பதால் அதற்கு சாதகமான சூழல் தொடர்ந்து நீடிக்கிறது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் திங்கட்கிழமை (12) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இந்த போட்டி மழை காரணமாக 95 நிமிடங்கள் தாமதித்தே தொடங்கியது. எனினும் தாமதம் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவரே குறைக்கப்பட்டது.

இதன்படி 19 ஓவர்களுக்கு வரையறுக்கப்பட்ட போட்டியில் இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. குறித்த நேரத்திற்குள் ஓவர்களை முடிக்கத் தவறியதால் போட்டித் தடைக்கு முகம்கொடுத்த இலங்கை அணித்தலைவர் தனேஷ் சந்திமாலுக்கு பதில் திசர பெரேரா அணித்தலைவராக செயற்பட்டார். அவரது இடத்திற்கு சுரங்க லக்மால் அழைக்கப்பட்டார்.

இந்திய அணியில் ரிஷப் பாண்ட் நீக்கப்பட்டு லொகேஷ் ராகுல் அழைக்கப்பட்டிருந்தார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.

எனினும் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்த அளவு அதிரடி காட்டத் தவறினர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க 8 பந்துகளில் 17 ஓட்டங்களைப் பெற்று அட்டமிழந்தார். கடந்த இரண்டு போட்டிகளிலும் அபாரமாக துடுப்பெடுத்தாடிய குசல் பேரேரா ரிவர்ஸ் ஸ்வீப் (Reverse sweep) முறையில் அடித்தாட முயன்றபோது போல்டானார். அவரால் 4 பந்துகளில் 3 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது பெரும் ஏமாற்றத்தை தந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த குசல் மெண்டிஸ் தொடர்ச்சியாக தனது திறமையை வெளிக்காட்டி இலங்கை அணியின் ஓட்டங்களை அதிகரிக்க உதவினார். அவர் உபுல் தரங்கவுடன் சேர்ந்து 3ஆவது விக்கெட்டுக்கு சற்று நிதானமாக 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டார்.

தனது நான்காவது T20 அரைச்சதத்தை பெற்ற குசல் மெண்டிஸ் 38 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 55 ஓட்டங்களை குவித்தார். அவர் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளிலும் இந்த நான்கு அரைச்சதங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உபுல் தரங்க 24 பந்துகளில் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் திசர பெரேரா முகம்கொடுத்த இரண்டு பந்துகளிலும் இரண்டு சிக்ஸர்களை விளாசி அதிர்ச்சி தந்தபோதும் அவரால் தொடர்ந்து விக்கெட்டை காத்துக் கொண்டு ஆட முடியவில்லை. 6 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குறிப்பாக இலங்கை அணியால் கடைசி ஓவர்களில் வேகமாக துடுப்பெடுத்தாட முடியாமல் போனது. இலங்கை அணி 12 ஆவது ஓவர் தொடக்கம் 17 ஆவது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட எடுக்கவில்லை.

இதன்போது கடைசி ஓவரை வீசிய ஷர்துல் தகூர் 4, 5 ஆவது பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கடைசி பந்தில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் தனது நான்கு ஓவர்களுக்கும் 27 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். T20 போட்டிகளில் இது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

இதனால் இலங்கை அணி 19 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய இந்திய அணிக்கு அகில தனஞ்சய ஆரம்பத்தில் அதிர்ச்சி கொடுத்தார். தனஞ்சய வீசிய இரண்டாவது ஓவரில் இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு அவர் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில் ஓட்டம் பெற தடுமாறிக் கொண்டிருந்த ஷிகர் தவான் 8 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனால் இந்திய அணி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஆடுத்து வந்த லொகேஷ் ராகுல் (18) மற்றும் சுரேஷ் ரெய்னா (27) ஆகியோரின் விக்கெட்டை முக்கியமான தருணங்களில் இலங்கை பந்துவீச்சாளர்களால் வீழ்த்த முடிந்தது.

எனினும் கடைசி பத்து ஓவர்களுக்கும் வெறும் 70 ஓட்டங்களையே பெற வேண்டி ஏற்பட்டதால் இந்திய அணிக்கு அந்த இலக்கை எட்டுவது கடினமாக இருக்கவில்லை.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே மற்றும் தினேஷ் கார்த்திக் எந்த நெருக்கடியும் இன்றி இந்திய அணியை வெற்றிவரை அழைத்துச் சென்றனர். இதன்போது பாண்டே 31 பந்துகளில் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் கார்த்திக் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன் மூலம் இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 153 ஓட்டங்களை எட்டியது.

இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த ஷர்துல் தகூர் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

எதிர்வரும் புதன்கிழமை (மார்ச் 14) இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 4 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா இந்த போட்டியில் வெற்றிபெற்றால் இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெறும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்