வன்முறையாளர்களுக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடுக்கவும்! – செயன்முறையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்குப் பிரதமர் பணிப்பு…

கண்டியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்குரிய நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், வன்முறைச் சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கண்டியிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இடம்பெற்ற இன வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும், புலனாய்வுத்துறையினரும் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 230 பேர் நேற்றுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 161 பேர் கண்டி மாவட்டத்திலும் ஏனைய 69 பேர் வெளியிடங்களிலும் கைசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான சூத்திரதாரிகள் எனக்  கருதப்படும் சிலர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.
விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அவை தொடர்பான அறிக்கைகள் இன்னும் சில நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கையளிக்கப்படவுள்ளன. இந்நிலையிலேயே விசாரணைகளைத்  துரிதப்படுத்துவதற்குரிய பணிப்புரையைப் பிரதமர் விடுத்துள்ளார்.
அத்துடன், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் இது சம்பந்தமாக பிரதமர் இவ்வாரம் பேச்சு நடத்தவுள்ளார் என்றும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது தீவிரமாக ஆராயப்படும் என்றும் பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, வன்முறைக்கான காரணம் பற்றியும், எதிர்காலத்தில் அத்தகையதொரு சம்பவம் இடம்பெறாமல் இருப்பதற்குரிய வழிவகைகளை ஆராய்வதற்காகவும் ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திருப்பிய பின்னர் உறுப்பினர்கள் விவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்கவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்