கட்டிடத் தொழிலாளி

கொழும்பு நிலமெங்கும்
கொங்றீட் காடாக
எழும்பி உயர்கிறது
இராட்சதக் கட்டிடங்கள்

உயர எழும்புகின்ற
ஒவ்வொரு கல்லின் பின்னும்
துயரம் பல நிறைந்த
தொழிலாளர் வாழ்க்கைகள்

உள்ளிருந்து பார்த்தாலே
உயிர் நடுங்கும் உயரத்தில்
உள்ள கம்பி பிடித்து
ஓரத்தில் தொங்குகிறான்

பட்டாலே பதறவைக்கும்
சுட்டெரிக்கும் வெய்யிலிலே
கட்டுகிறார் வெட்டுகிறார்
கண்ணீரும் காய்ந்து போக

கை கடுக்கும்
கால் கடு கடுக்கும்
செய் வேலை என்று
சின்ன மகள் பசி கூறும்

நீளமான கம்பிகள்
ஆழமான குழிகள்
கால் கொஞ்சம் தவறினால்
வாழ்க்கையே தவறும்

அரை வயிற்று உணவு
அடிக்கடி தாகம்
நிறைவேறா ஏக்கங்கள்
நிதமும் இவர் வாழ்வில்

கட்டிடம் உயர்கிறது
கட்டுபவர் வாழ்க்கைகள்
கடுகளவும் உயராத
கண்ணீர் வாழ்க்கை இது

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்