கனடாவில் காதலில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இளம்பெண் கொலை

கனடாவில் காதலில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் Calgary நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 25-ஆம் திகதியன்று காலை இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

கொலை தொடர்பான பொலிசாரின் விசாரணையில், உயிரிழந்தது நடியா-எல்-டிப்(22) என்றும், காதலில் ஏற்பட்ட மோதலில் அவரது காதலன் அடெம் பெடஹர்(21) என்பவர் தான் கொலை செய்திருப்பதாகவும் கண்டறிந்தனர்.

அதனையடுத்து தலைமறைவாக இருந்த அடெம்மை கைது செய்ய நாடு முழுவதும் உள்ள பொலிசாருக்கு கடந்த திங்கட்கிழமை அன்று உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், Evansburg பகுதியில் உள்ள நெடுங்சாலை 22 மற்றும் 16 சாலையில் பொலிசார் நடத்திய சோதனையில் அடெம் சிக்கியுள்ளார்.

ஆனால், தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் பொலிசாரை நோக்கி அந்த நபர் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் RCMP அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்ததையடுத்து பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சம்பவத்தை நேரில் கண்ட லொறி ஓட்டுநர் கொலின்ஸ் கூறுகையில், “இது போன்ற சம்பவங்களை செய்திகளில் தான் பார்த்துள்ளேன், நேரில் பார்ப்பது இதுவே முதல்முறை.

அந்த இடமே ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது. அந்த நபர் மறைந்திருந்து 30-40 முறை பொலிசாரை நோக்கி சுட்டதை நான் பார்த்தேன்” என கூறியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்