ஓசோனில் ஓட்டை

ஆகாயம்
அதன் நெஞ்சில்
ஓர்
ஆறாக் காயம்

இந்தக் காயம்
பகையால் வந்ததல்ல
புகையால் வந்தது.

காயம்
காய்ந்து
ஆறிப் போக வேண்டும்
தவறினால்
இந்தப் பூமி
தேய்ந்து
நாறிப் போகும்

காயத்துக்கு
கட்டுப் போட வேண்டியவர்களே
காபனை சுட்டுப் போடுவதால்
வெங்காய அளவில் இருந்த
விஞ்ஞானக் காயம்
பெருங் காயமாகி
பிரச்சினை தருகிறது.

உண்ணும் பெருங்காயம்
உடலின் வலி நீக்கும்.
விண்ணின் பெரும் காயம்
மண்ணின் வளி நீக்கும்
அதன் மூலம்
வாழ்கின்ற வழி நீக்கும்.

ஓசோனை அழிப்பது
ஆசானை அழிப்பது போல
ஓசை இல்லாமல்
உலகம் கெட்டுப் போகும்.

இந்த
ஓசோன் படை
உலகக் கோட்டை காக்கும்
ஒப்பற்ற படை.
அதை அழித்தால்
ஊதாக் கதிர்
படை எடுத்து
உடைத்துத் தள்ளிவிடும்
உள் இருக்கும் உயிர்களையும்.

ஓசோன்
உயிர் காக்கும்
படை
அதில் விழும் ஓட்டை
அனைவருக்கும்
பாடை…

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்