சங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்!

முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கிரிக்கெட்டில் சர்வதேச வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும்.

உலகெங்கும் உள்ள தொழில்சார் கிரிக்கெட் வீரர்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து நாடுகளினதும் தேசிய வீரர்கள் சங்கங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து 1998 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.

தேசியம், மதம், அரசியல் அழுத்தம் அல்லது இனம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் உலகக் கிரிக்கெட் வீரர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக இது உள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு மற்றும் வீரர்களின் பொது நலன்கள் தொடர்பான விடயங்களில் இந்த சர்வதேச அமைப்பு அவதானம் செலுத்துகிறது.

அண்மையில் இடம்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை குழு ஒன்று நிறுவப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியான கென் டி அல்விஸ் குறிப்பிட்டார்.

இதில் உறுப்பு சங்கங்கள் தமது நாடு சார்பில் ஆலோசனை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரரின் பெயரை பரிந்துரை செய்திருப்பதோடு இலங்கையில் இருந்து சங்கக்காரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வீரர்களின் பிரச்சினைகள் மற்றும் விடங்களை பற்றி மாத்திரம் சங்கக்கார பேசப்போவதில்லை, அவரால் அனைத்து சர்வதேச வீரர்களின் நலனையும் பாதுகாக்க முடியுமாகியுள்ளது என்று கென் டி அல்விஸ் குறிப்பிட்டார்.

விளையாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து வீரர்களின் வலுவான மற்றும் ஒற்றுமையான குரலாக இந்த குழு செயற்படவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வீரர்கள் ஆலோசனை குழு

ரொஸ் டெய்லர் (நியூசிலாந்து)
ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்)
வில்லியம் போர்டபீல்ட் (அயர்லாந்து)
சகீப் அல் ஹஸன் (பங்களாதேஷ்)
ஆரோன் பின்ச் (அவுஸ்திரேலியா)
ஜே.பி. டுமினி (தென்னாபிரிக்கா)
கைல் கோட்சயர் (ஸ்கொட்லாந்து)
குமார் சங்கக்கார (இலங்கை)
விக்ரம் சொலங்கி ( தலைவர் – இங்கிலாந்து)
கிராம் ஸ்மித் ( சுயாதீன குழு உறுப்பினர் – தென்னாபிரிக்கா)
டொம் மப்பட் (தலைமை செயற்பாட்டு அதிகாரி)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்