தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு

இலங்கை வரலாற்றிலே தமிழ் மக்களினுடைய இடம்பெயர்வுகள் புத்தி சாதூர்யமான அரசியல் காய்நகர்த்தல்களால் இடம்பெற்றவைகளாகும். தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் அனுராதபுரம், பொலனறுவை இராசதானிக் காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டன. இனமுரண்பாடுகளும் மோதல்களும் அதிகரித்ததன் விளைவாக இடம்பெயர்வுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இது எம்மக்களுக்கு துன்பியலினை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் இருப்புக்கள், கலாசார அடையாளங்கள், பொருளாதாரம், கல்வி என்பன திட்டமிட்டு வேரோடு பிடுங்கப்பட்டன.

இடம்பெயர்வு என்பது ஒரு சாதாரண விடயம் அல்ல. யுத்தம் ஒன்று இடம்பெறும்போதே இதுவும் இடம்பெறுகின்றது. மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் தமது உடமைகளை இழந்து செல்கின்றார்கள். முதல் நாள் வீடு, பொருள், உத்தியோகம், கல்வி என வாழ்ந்தவர்கள் அடுத்தநாள் வெறுங்கையுடன் காடுகளிலும் வீதிகளிலும் நின்றனர். இரவு பகல் பாராமல் நடந்தார்கள், ஓடினார்கள். பயங்கரத் தாக்குதல்களுக்கு முகம்கொடுத்தார்கள். இதனால் பயணங்களும் தடைப்பட்டு காடுகளில் தங்கவேண்டிய சூழல்நிலை உருவாகியது.

1958, 1977, 1983, 1995, 2000, 2006 – 2009 களில் இடம் பெற்ற இடம்பெயர்வுகள் யாராலும் மறக்க முடியாதவை. காடுகளினூடாக செல்லுதல் என்பது அபாயகரமானதாகும். கால்களில் செருப்புக்கள் இன்றி செல்லும்போது முட்கள் கால்களைப் பதம் பார்க்கும் நிலையில் இரத்தம் வழிய வலிகளுடன் சென்றனர். வயது முதிர்ந்தவர்களை தூக்கிச் செல்ல முடியாது காடுகளில் விட்டும் சென்றுள்ளனர். இது எமது உயிரைக் கொண்றுவிட்டு செல்வது போன்றதாயிற்று. பயணிப்பதற்கு இடமின்றி பிணங்களில் மேல் ஏறி நடந்தனர். அப்போது சிலர் அழுதுகொண்டு சென்றுள்ளனர்.

சதுப்பு நிலங்களைக் கடந்து மறு திசை செல்ல வேண்டி ஏற்பட்டது. தமது உயிரைக் காப்பாற்ற கடக்கும் போது சிலர் மரங்களின் கொப்புகளில் தாவி பலரைக் காப்பாற்றினர், சிலர் சதுப்பு நிலத்திலே உயிரை விட்டனர். இதில் மனைவியை இழந்து கணவனும், பிள்ளைகளை இழந்து பெற்றோரும் துடித்து அவ்விடத்தே உயிர்விட்டமையும் உண்டு. இடம்பெயரும் போது கொண்டு சென்ற உணவுகள் முடிந்துவிட உண்பதற்கு உணவு இன்றி சிரமப்பட்டனர். இரவு நேரங்களில் மாத்திரமே உணவினைச் சமைத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் கண்ணீர் வடித்தார்கள். தாகம் தீர்ப்பதற்கு நீரின்றி சிரமப்பட்டு குளங்களில், ஏரிகளில் உள்ள நீரை அருந்தினர். சுத்தமான நீராக இன்மையால் வயிற்றோட்டம், வாந்திபேதி குழந்தைகளுக்கு ஏற்பட்டு குழந்தைகள் மரணத்தை தழுவினர். பரிதாபகரமான உயிரிழப்புக்கள் அவை.

இடம்பெயர்வின்போது கற்பனித் தாய்மார்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பல ஆசைகள், கனவுகளுடன் தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் கனவுகள் தவிடுபொடியாகியது. காடுகளில் பயணம் செய்யும்போது பிரசவ வலியால் தாய்மார்கள் இறந்துள்ளதுடன், குழந்தைகளையும் பெற்றெடுத்தனர். சிலர் கூறலாம் எமது பழைய காலத்திலும் காடுகளில் மக்கள் வாழும்போது குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்தானே என்று. ஆனால் அப்போது மருத்துவீச்சிமார்கள் உள்ள காலம். இடம்பெயரும்போது அருகில் தாதியர்கள் கூட இல்லாத நேரம்.

அன்றைய தினம் அணிந்திருந்த உடைகளுடனே மக்கள் இடம்பெயர்ந்தனர். இதனால் மாற்றுவதற்குக் கூட உடையின்றி உடுத்த உடையுடனே முகாம்களுக்கு வந்து சேர்ந்தனர். சிலர் கொண்டு வந்த உடைகளை இடையிலே விட்டும் வந்துள்ளனர். சமதரைகளிலே மக்கள் கொட்டகைகள் அமைத்து இரவில் தங்கிவிட்டு பகல் பொழுதில் நடக்கத் தொடங்குவார்கள். இந்த நடைகள் மன நிம்மதியினையோ, ஆறுதலையோ தருவதாக அமையாது பயத்தினையும் துன்பத்தினையுமே தருவதாக அமைந்தன. வீதிகளில் உறங்கும் போது வாகன விபத்திற்கு உள்ளானதுடன் காடுகளில் மிருகங்களுக்கும் எம்மக்கள் உணவானார்கள். இன்றும் இவற்றை நினைக்கையில் எம்மை அறியாமலே எம் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன.

வெடில்கள் பட்டமையினால் சிலர் நடக்கமுடியாதவர்களாய் ஆனார்கள். இவர்களை மக்கள் வேறுபாடுகள் பார்க்காமல் தூக்கி சுமந்து சென்றார்கள். அருகில் வைத்திய சாலைகள் இன்மையினால் பலரைக் காப்பாற்ற முடியாது போனது. பாதுகாப்பான இடத்தை அடைந்து அங்கு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அது பயனளிக்கவில்லை. மக்கள் கூடி ஒன்றாக இருந்த இடத்தில் பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றமையினால் குடும்பத்துடன் இறந்தும் உள்ளதுடன், அச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் மனனோயாளிகளாகவும் காணப்படுகின்றனர். மேலும் இடம்பெயரும் போது காணாமல் சென்றவர்கள் பற்றி இன்றும் ஓர் பதிலும் கிடைக்காத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஒருசில பிரதேசங்களில் இருந்த மக்கள் இடம்பெயரும்போது ஆற்றினைக்கடந்து மறு பிரதேசத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு தோணியில் எத்தனை பேர் செல்வது? பயத்தின் காரணமாக அதிகமானவர்களை ஏற்றிச்சென்ற தோணிகள் ஆற்றின் நடுவில் கவிழ்ந்து உயிர்விட்ட சம்பவங்கள் அதிகம். இடம்பெயர்வு என்று கூறிவிடுவது இலகு. ஆனால் அதனை அனுபவிக்கும் போது உள்ள வலி நாம் இறக்கும் வரை தொடரும்.

இடம்பெயர்ந்து அகதிகளாக அகதி முகாம்களில் உள்ளபோது பாரிய சிக்கல்களை எதிர்கொண்டதுடன் துன்பத்திற்கும் ஆளானார்கள். இன்றும் எம்மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்றநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அகதி முகாம்களில் வாழும் போது பலர் நோய்த்தாக்கத்திற்கு உள்ளானதுடன் இறந்தும் போனார்கள். நிம்மதியற்ற வாழ்க்கை. எப்போது எம் சொந்த இடத்திற்கு எம்மை அனுப்புவார்கள் என்ற ஏக்கம். ஒழுங்கான கொட்டகைகள் இன்மையினால் பெரும் சிரமப்படனர். மழை, வெயில், காற்று என்று மக்கள் துன்பம் மேல் துன்பங்களை அனுபவித்தார்கள். சில முகாம்களில் உள்ளவர்களுக்கு போசாக்கான உணவுகள் கிடைக்கவில்லை. உணவுப் பொதிகளினையோ, பொருட்களையோ வேண்டுவதற்கு சிரமப்பட்டார்கள்.

முகாம்களில் அகதிகளாக இருந்தவர்கள் சிலர் கொல்லப்பட்டதுடன் கடத்தப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டார்கள். மனவேதனைகளால் உயிரிழந்தும் உள்ளனர். இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இன்றி கொட்டகைகளுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்துமுள்ளனர். மேலும் முகாம்கள் இருந்த இடங்கள் சுடலைகளாகவும் இருந்தன. கம்புகள் நடுவதற்கு மண் அகழும் போது எலும்புகள் காணப்பட்ட போதும் அதனைப் பொருட்படுத்தாது அவ்விடத்திலே வாழ்ந்தும் உள்ளனர்.

அகதிகளாக முகாம்களில் அனேகமான பெண்கள் விதவைகளாக வாழ்ந்தனர். மேலும் பொங்கல், புதுவருடம், தீபாவளி போன்றவற்றை மறந்த மக்களாக மனக் கவலைகளை சுமர்ந்த மக்களாக வாழ்ந்தனர். பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகியது. துன்பப்பட்ட மக்கள் மீண்டெழுத்து கல்விக்கு பிரவேசிப்பது சிரமமாக இருந்தது. கவலைகளைப் போக்க கல்வியே வழி என சிலர் கூறினர். தமது பாதுகாப்பு, குடும்பச்சூழல், இயல்பு வாழ்க்கை போன்றவற்றை இழந்து உணவு உண்பதும், நித்திரை கொள்வதும், அன்றாட வீட்டு வேலைகளைச் செய்வதும் ஒரே இடத்தில் செய்யவேண்டியிருந்தது.

இடம்பெயர்வுகள் மக்கள் வாழ்க்கையினை திசைதிருப்பி விட்ட ஒன்று. உறவுகள், உடமைகள், உரிமைகள் இல்லாதவர்களாக ஆக்கியது. இன்றும் எம்மக்கள் அகதி முகாம்களில் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். சிலருடைய நிலங்கள் இன்றும் விடுவிக்கப்படாமல் உள்ளன. சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டவர்கள் வீடுகள் இன்றி அங்கும் கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடைய சொந்த வீடுகள் அழிக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டும் உள்ளன. இடம்பெயர்வுகளால் மாற்றுத்திறனாளிகளாகவும் பலர் ஆக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்தும் எம் மக்கள் இன்றும் பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றனர். அதிலும் இடம்பெயர்வுகள் மூலம் பட்ட இன்னல்கள் எவராலும் மறக்கமுடியாத வலியாகவே உள்ளது.

மகிழையாள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்