சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை உட்படுத்துவர்கள் இனிமேல் தொங்கவிடப்படுவார்கள்

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை உட்படுத்தும் நபர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அண்மைக்காலமாக இந்தியாவில் காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம், உன்னாவ் பகுதியில் இளம்பெண் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

எனவே, சிறுமிகள் மற்றும் குழந்தைகளைப் பாலியல் வான்கொடுமைக்கு உட்படுத்தும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் என்றும், இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பிய தலைமை அமைச்சர் மோடி, மத்திய அமைச்சரவையை உடனடியாகக் கூட்டினார். அதன்படி மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இதில் சிறுமிகள் வன்கொடுமைச் சம்பவத்தில், சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்சோ) தண்டனையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது இந்தச் சட்டத்தின் கீழ், அதிக பட்சமாகத் தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த அவசர சட்டம் அரச தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அரச தலைவரின் ஒப்புதல் அளித்ததும் சட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்