முன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன?

யாழ் மாநகரசபை, பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர்கள் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரியிருந்தனர். இவ்வாறு கோரியவர்கள் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பினர் வவுனியா நகரசபை தலைவர் பதவியில் வெற்றியீட்டியதை மையப்படுத்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட கேள்வியினை எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒட்டுமொத்த நாட்டின் அரசியலையும் புரட்டிப்போட்டுள்ளதைப் போன்றே தமிழ்த் தேசிய இனத்தின் அரசியலிலும் ஒரு சிக்கலான நிலையைத் தோற்றுவித்துள்ளது.

தேசிய இன விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக வழியில் அதனை முன்னெடுப்பதற்கு விட்டுக்கொடுப்புகளுடனான வலுவான ஐக்கியம் தேவைப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இருப்பினும் எமது செயற்பாடுகளை தங்களுடைய நலன்கள் கருதி, பாரதூரமான விமர்சனங்களாகவும் குற்றச்சாட்டுக்களாகவும் முன்வைக்கின்ற நிலைமையையும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் காலத்திலிருந்து நாம் அவதானித்து வருகின்றோம்.

ஒரு பொதுச்சின்னத்தை சட்டத்தரணிகள் நிறைந்த அகில இலங்கை தமிழ் காங்கிரசால் கொண்டுவர முடியாமையே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஏனைய அமைப்புகள் மற்றும் கட்சிகளுடன் இணைந்து தற்காலிக கூட்டணி ஒன்றை ஏற்படுத்த வழிவகுத்தது. இந்த விடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மட்டுமே குற்றவாளிகள் போலவும் தாங்கள் குற்றமற்றவர்கள் போன்றும் ஆரம்பத்திலிருந்தே அகில இலங்கை தமிழ் காங்கிரசினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

நாங்கள் ஆரம்பத்திலிருந்தே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமையினை ஒரு நட்புச் சக்தியாகப் பார்த்து வந்ததின் காரணமாக இத்தகைய விமர்சனங்களை பூதாகரமாக்கி விரிசல்களை அதிகமாக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஆனால், அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், கஜேந்திரகுமார் போன்றவர்களால் இந்த விடயம் மேலும் மேலும் பூதாகப்படுத்தப்பட்டு நாங்கள் ஏதோ தேசவிரோதிகள் என்ற பாணியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆகவே, தற்போது இதற்கான பதிலை மக்களுக்குச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை ஏற்படுத்தியவர்களும் அவர்களே என்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்களில் வவுனியா நகரசபைத் தேர்தலில் நாங்கள் தென்னிலங்கை கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியதாகவும், ஆனால் அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகப் பேசிய சுரேஸ் பிறேமச்சந்திரன் அவரும் அதனையே செய்ததாகவும் பதவிக்காக அவர் எதையும் செய்வார் என்றும் ஈரோஸ் மற்றும் சிறிரெலோ போன்றவர்களுடன் இவர்கள் கூட்டுச் சேர்ந்துள்ளனர் என்றும் நம்பகத்தன்மையற்றவர் என்ற தொனியிலும் இவரது குற்றச்சாட்டுக்கள் அமைந்திருக்கின்றன.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஈபிஆர்எல்எவ் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிற்கு எண்பத்தியொரு ஆசனங்கள் கிடைத்தன. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின்கீழ் போட்டியிடத் தயாரில்லை என்று தெரிவித்து வெளியேறி நாற்பந்தைந்து நாட்களில் இந்த ஆசனங்களைப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியிலும் வன்னி போன்ற இடங்களிலும் சபைகளை அமைப்பதற்கு எமது ஆதரவு பலருக்குத் தேவைப்பட்டது.

இந்நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் கோவிந்தம் கருணாகரனும் (ஜனா) என்னுடன் பேச முற்பட்டவேளையில், கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக உருவாக்கி அதற்கான ஒரு பொதுச்சின்னத்தை அறிவித்து புதிய ஐக்கியத்தைக் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு நாம் அவர்களிடம் தெரிவித்தோம். அவர்களும் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து இது குறித்து விவாதிப்போம் என்று கூறிச்சென்றனர். ஆனால் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. ஆகவே, நாங்கள் சில பொதுவான முடிவுகளையும் எடுக்க வேண்டியிருந்தது. தெற்கிலுள்ள கட்சிகளுக்கோ அல்லது தமிழ்க் கட்சிகளுக்கோ நாங்கள் வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே, தேர்தல்களிலிருந்து ஒதுங்கியிருப்பது என்ற முடிவினை மேற்கொண்டிருந்தோம். அந்த முடிவு சகல சபைகளுக்கும் பின்பற்றப்பட்டபோதிலும் எங்களது தீர்மானத்தையும் மீறி, வேறு அமைப்புக்களுக்கு ஆதரவளித்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அவர்கள் அத்தகைய பிரதிநிதிகள் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதையும் நாங்கள் அறிவித்திருக்கின்றோம்.

வவுனியாவிலும் இதே நிலையைத்தான் நாங்கள் பின்பற்றுவதாக இருந்தது. ஆனால், ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஐ.தே.க. சி.சு.க. மற்றும் ஈபிடிபி போன்ற கட்சிகள் ஆதரவளித்திருந்த நிலையில் வவுனியாவில் இதில் மாற்றங்கள் எற்படலாம் என்ற கருத்து மிகவும் பலமாக இருந்தது. இதனால் வவுனியா நகரசபை முதல் ஏனைய சபைகளும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் கைகளுக்குச் சென்றுவிடுமோ என்ற அச்சம் சிவில் சமூகங்களிடம் ஏற்பட்டது. ஆகவே எம்மைப் போட்டியிடுமாறு சிவில் சமூகங்களினால் வலியுறுத்தப்பட்டது. எனவே இறுதி நேரத்தில் நாங்கள் போட்டியிடுவதன் காரணமாக அத்தகைய தென்னிலங்கை கட்சிகளுக்கான பலம் குன்றும் என்ற காரணத்தால் ஏனைய தமிழ் கட்சிகள் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். மூன்று அல்லது நான்கு உறுப்பினர்களுடன் நாங்கள் தலைவர் பதவிக்குத் தெரிவு செய்யப்படுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் வவுனியா நகரசபையைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடும், தமிழரசுக் கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கக்கூடிய உட்கட்சிப் பூசல்களும், ஈபிடிபியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்குமிடையில் நிலவிய முரண்பாடும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுடனான முரண்பாடுமே எம்மை வெற்றியடையச் செய்திருந்தது என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரம் ஏனைய மூன்று சபைகளிலும் செட்டிகுளத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றியீட்ட, ஏனைய இரு சபைகளிலும் தமிழரசுக் கட்சி மயிரிழையில் வெற்றிபெற்றது. ஏனைய சபைகளில் நாங்கள் போட்டியிட்டபோதிலும்கூட அங்கு எமக்கு போதிய ஆதரவை வழங்க யாரும் முன்வரவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

ஆகவே, தேசியக் கட்சிகளுடன் உறவு வைத்தோம். தேசியக் கட்சிகளுடன் இணைந்துவிட்டோம். பிறேமச்சந்திரன் சொன்ன சொல்லிலிருந்து பின்வாங்கிவிட்டார் என்று சொல்வதில் எத்தகைய உண்மையும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் திரு.கஜேந்திரகுமாரிடம் நாங்கள் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகின்றோம். தொடக்கத்திலிருந்தே சபைகளுக்கான தலைவர் பதவிகளுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று மிகத் தீவிரமாக வலியுறுத்தி வந்தீர்கள். யாழ்ப்பாணம் மாநகரசபை, பருத்தித்துறை, சாவகச்சேரி நகரசபைகள் மற்றும் சில சபைகளிலும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டீர்கள். நேரடியாகவோ மறைமுகமாவோ யார் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் உங்களது இந்த போட்டி முயற்சிகள் அமைந்திருந்தது?

ஐக்கிய தேசியக் கட்சியினரோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரோ, ஈபிடிபியினரோ அல்லது தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்போ வாக்களிக்கலாம் என்ற நம்பிக்கையில்தானே நீங்கள் இரகசிய வாக்கெடுப்பைக் கோரியிருந்தீர்கள்? அவ்வாறு யாரும் வாக்களிக்கக்கூடும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள். ஆனால் அது நடைபெறாததால்தான் உங்களால் ஒரு சபையிலும் வெல்ல முடியவில்லை. அப்படி வாக்களித்து நீங்கள் வென்றிருந்தால் தென்னிலங்கை சிங்களக் கட்சிகளின் அல்லது ஈபிடிபியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க நாங்கள் விரும்பவில்லை என்று நீங்கள் இராஜினாமா செய்திருப்பீர்களா? உங்களுக்கு ஆதரவளிக்குமாறு நீங்கள் நேரடியாகக் கோராதபோதிலும் உங்களின் சார்பாக பல குழுக்கள் ஈபிடிபியின் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையும் நாங்கள் அறிவோம்.

இவ்வாறான ஒரு சிந்தனை தெளிவற்ற அணுகுமுறைகளை நீங்கள் கையாண்டுகொண்டு வவுனியா நகரசபையைக் காப்பாற்றி தமிழர் வசம் ஒப்படைத்ததற்காக நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் என்பன அர்த்தமற்றவையும் அநாகரிகமானவையுமாகும்.

நாங்கள் தேசியத்தைக் கைவிட்டுவிட்டோம். பல்வேறு பட்ட தமிழ்த் தேசியவிரோத அமைப்புக்களுடன் இணைந்துவிட்டோம் என்ற குற்றச்சாட்டு உங்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் அங்கம் பெற்றுள்ள ஈரோஸ் என்ற அமைப்பு 1974ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இறுதியாக பாலகுமாரனால் தலைமையேற்று நடத்தப்பட்ட இயக்கம். அவருடன் இணைந்திருந்த செயற்பாட்டாளர்களே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார்கள். அதேபோன்றுதான் விடுதலைப் புலிகளிலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் உள்ளிட்ட தேசியக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட ஏனைய கட்சிகள் இணைந்து கொண்டன. இதில் நாங்கள் அனைவரும் இணைந்து ஆனந்த சங்கரி செயலாளர் நாயகமாக திகழும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தை பொதுச்சின்னமாக பெற்றுக்கொண்டு தேர்தலில் களமிறங்கினோமே தவிர, எங்களது கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆயுதப் போராட்டம் மற்றும் ஜனநாயக அரசியல் போராட்டம் ஆகிய இரு தளங்களிலும் கடந்த 40 வருடங்களாக ஈடுபட்டு வருகின்றது. பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சர்வதேச ரீதியிலும் எமது மக்களின் உரிமைகள் தொடர்பான விடயங்களை மிகத் தெளிவாக முன்வைத்து அதற்காகக் குரல் கொடுத்து வருகின்றோம். எமது மக்களின் மண்மீட்புப் போராட்டத்தில், அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க, எமது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கும் நாம் தொடர்ந்தும் உறுதியாக குரல் கொடுத்து வருகிறோம்.

ஆனால், அண்மையில் நீங்கள் ஜெனிவாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் முன்வைத்த சில கருத்துக்கள் தேசியத்தை வலுவூட்டும் கருத்துக்களா அல்லது தேசிய இன விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்களா என்பதை உங்களிடம் கேட்க விரும்புகிறோம்.

சிறுவர்களைப் பராமரித்து அவர்களை யுத்தகளத்திற்கு விடுதலைப் புலிகள் அனுப்பினார்கள் என்று நீங்கள் கூறிய கருத்தும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராட்ட அமைப்புக்களில் இருந்தவர்கள் அனைவரும் படிக்காதவர்கள் என்றும் நீங்கள் முன்வைத்த கருத்தும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தும் கருத்தா கொச்சைப்படுத்தும் கருத்தா? இந்த ஆயுதப் போராட்ட காலத்தில் உங்களது பங்களிப்பு எந்தளவிற்கு இருந்தது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். ஆகவே, எழுந்தமானமாக குற்றச்சாட்டுக்களை அடுக்குவதும், தவறிழைக்காத புனிதவான்களைப் போல் உங்களைக் காட்டிக்கொள்வதும் தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்க வேண்டிய எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமான கருத்துக்கள் அல்ல.

மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டால் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதாகப் போய்விடும் என்று கூறி மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்று கொள்கை முடிவெடுத்திருந்த நீங்கள் இப்பொழுது அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடுவதன் மூலம் உங்களது கொள்கை தவறானது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

இந்த அறிக்கையை மன விருப்பத்துடன் எமது கட்சி வெளியிடவில்லை. ஆனால் தொடர்ச்சியான உங்களது குற்றச்சாட்டுக்கள் பதிலளிக்காமல் விடப்படுமிடத்து அது உண்மையாகிவிடும் என்ற ஆபத்து உள்ளதாலேயே நாம் பதிலளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம். இன்னும் பல விடயங்களை நாங்கள் குறிப்பிட வேண்டியிருந்தாலும்கூட, மக்கள் நலன்களுக்கான எதிர்கால அரசியல் செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு மேற்கண்ட விடயங்களுடன் நிறுத்திக்கொள்கிறோம். நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்